சில குடும்பங்களில் தொடர்ந்து ஆண் குழந்தைகள் அல்லது பெண் குழந்தைகள் பிறப்பதற்கு என்ன காரணம் என்பதை ஹார்வர்ட் ஆராய்ச்சியாளர்கள் விளக்கியுள்ளனர்.

பொதுவாக கருவில் வளரும் குழந்தை ஆண் அல்லது பெண்ணாக இருக்க காரணம் ஆண்கள்தான். ஆண்களிடம் இருந்து பெறப்படும் குரோமோசோம் தான் குழந்தையின் பாலினத்தை நிர்ணயம் செய்கிறது. குரோமோசோமா? அது என்ன? அதாவது மனிதர்களில் மொத்தம் 23 ஜோடி குரோமோசோம்கள் காணப்படுகின்றன. இதில் உடல் செல்களாக 22 ஜோடிகள் உள்ளன. அவைதான் ஆட்டோசோம்கள். 23ஆவது ஜோடி பாலின குரோமோசோம்களாகும். இவைதான் பாலினத்தைத் தீர்மானிக்கும். இவை அல்லோசோம்கள்.

பாலினம் நிர்ணயமாவது எப்படி?

பொதுவாக பெண்களிடம் XX குரோமோசோம், ஆண்களிடம் XY குரோமோசோம் இருக்கும். ஒரு பெண் கருத்தரிக்கும் போது, அவருடைய கருமுட்டையில் X குரோமோசோம் இருக்கும். இது எப்போதும் மாறாதது. ஆனால் ஆணின் விந்தணுவில் இருந்து வருகிற குரோமோசோம் தான் பாலினத்தை தீர்மானிக்கும். ஆணின் விந்துவில் இருந்து வரும் X அல்லது Y குரோமோசோம், பெண்ணின் X குரோமோசோமுடன் இணைந்து கருமுட்டையில் உள்ள குழந்தை பாலினத்தை நிர்ணயம் செய்யும். இது எளிய விஷயம் தான். ஆனால் சில குடும்பங்களில் தொடர்ந்து ஆண் குழந்தைகள் அல்லது பெண் குழந்தைகள் பிறப்பதற்கு என்ன காரணம் என்பதை ஹார்வர்ட் ஆராய்ச்சியாளர்கள் விளக்கியுள்ளனர்.

ஆராய்ச்சியும் முடிவும்!

ஹார்வர்ட் ஆராய்ச்சியாளர்கள் அமெரிக்காவில் 1956 மற்றும் 2015க்கு இடையில் பிறந்த குழந்தைகளின் தரவுகளை கொண்டு தொடர்ந்து ஆண் குழந்தைகள் அல்லது பெண் குழந்தைகள் பிறப்பதற்கு என்ன காரணம் என ஆராய்ந்தனர். அதில் இரண்டு குழந்தைகள் இருக்கும் குடும்பங்களை பார்க்கும்போது ஒரு ஆண், ஒரு பெண் குழந்தை என இருவர் இருப்பது சாதாரணமாக தோன்றியது. ஆனால் 3 அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் இருக்கும் குடும்பங்களைப் பார்த்தால் சற்று வித்தியாசம் இருந்தது. அவை அனைத்துமே ஆண் அல்லது அனைத்துமே பெண் குழந்தைகளாக இருக்கும் வாய்ப்புகள் அதிகம் இருந்தன. அதன்படி, ஏற்கனவே 3 ஆண் பிள்ளை இருக்கும் வீட்டில், 4ஆவது குழந்தை ஆணாக பிறக்க வாய்ப்பு இருக்கும் என அறிவியல் கூறுகிறது.

சுருக்கமான விளக்கம்!

சுருங்கச் சொன்னால் 3 ஆண் குழந்தைகள் இருக்கும் குடும்பங்களில், அடுத்த குழந்தை ஆணாக இருக்கும் வாய்ப்பு 61% உள்ளது. அதுவே 3 பெண் குழந்தைகள் இருந்தால் அடுத்த குழந்தை பெண்ணாக பிறக்க 58% வாய்ப்புள்ளது. இந்த ஆய்வுகளின் முடிவுகள் சயின்ஸ் அட்வான்சஸில் வெளியாகின.

வயது காரணமா?

இப்படி அடுத்தடுத்து ஒரே பாலினத்தில் குழந்தைகள் பிறப்பதற்கு வயதும் ஒரு காரணியாக உள்ளன. ஒரு பெண் 29 அல்லது அதற்கு மேற்பட்ட வயதில் முதல் குழந்தையை கருத்தரித்தால், அவரை 23 வயதுக்குள் இருக்கும் பெண்களுடன் ஒப்பிடும்போது, அடுத்தடுத்து ஒரே பாலினத்தில் குழந்தை பெற்றெடுக்க 13% வாய்ப்புள்ளது. இதற்கு பெண்களின் பிறப்புறுப்பு பிஎச் (pH) மதிப்பு ஒரு காரணம். வயதாகும் போது பெண்களுடைய உடல் வேதியியல் மாற்றம் அடைகிறது. இந்த சூழலில் வீரியமுள்ள விந்து முதலில் கருமுட்டைக்குச் செல்வதால் பாலினம் தீர்மானிக்கப்படுகிறது. அது X அல்லது Y ஆக் இருக்கலாம். இந்த ஆய்வில் தந்தைவழி காரணிகள் ஆராயப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சில குடும்பங்களில் அடுத்தடுத்து ஒரே பாலினத்தில் குழந்தைகள் பிறந்த தரவுகளை ஆராய்ந்து இந்த ஆய்வில் ஒரு முடிவுக்கு வந்தாலும், அதற்கான காரணத்தை முழுமையாக கண்டறிய இன்னும் சில ஆண்டுகள் ஆகலாம் என சொல்லப்படுகிறது.