ரூ.11 லட்சம் வரதட்சணையை வாங்க மறுத்த பாதுகாப்பு படை வீரர்..! என்ன காரணம் தெரியுமா..?

எல்லை பாதுகாப்பு படை வீரர் தனக்கு கொடுத்த வரதட்சணை பணத்தை வேண்டாம் என மறுத்து அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூரில் வசித்து வருபவர் ஜிதேந்திர சிங். இவர் தற்போது எல்லை பாதுகாப்பு படை வீரராக தேர்வாகி வேலையில் உள்ளார். இவருக்கும் அதே பகுதியில் வசித்து வந்த சஞ்சல் செகாவத் என்ற பெண்ணிற்கும் நிச்சயம் செய்யப்பட்டு கடந்த சனிக்கிழமையன்று திருமணம் சிறப்பாக நடைபெற்றது.

அப்போது மணமகளின் தந்தை,மணமகனின் கையில் ரூ.11 லட்சம் ரூபாயை வழங்கினார். ஆனால் ஜிதேந்திர சிங் அதனை வாங்க மறுத்து 11 ரூபாயும், ஒரு தேங்காயும் கையில் கொடுங்கள் போதும் என தெரிவித்திருந்தார்.பின்னர் இதுகுறித்து கருத்து தெரிவித்த ஜிதேந்திர சிங், சட்டப் படிப்பில் பிஎச்டி படித்துவரும் மனைவி சஞ்சல் மட்டுமே எங்கள் குடும்பத்துக்கு போதும்.

அவர் படித்து முடித்த உடன் மாஜிஸ்திரேட் ஆகும் போது, இந்த பணத்தை விட அது எனக்கு பெரிய விஷயம் தானே என பெருமிதமாக தெரிவித்துள்ளார். இதனால் திருமணத்திற்கு வந்த அனைவரும் மாப்பிள்ளையை வெகுவாக பாராட்டி சென்றனர். மேலும் இந்த செய்தி அறிந்த சமூக வலைத்தள வாசிகள் அனைவரும் மாப்பிள்ளைக்கு தொடர்ந்து வாழ்த்துகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.