மீன் வேண்டுமா? ஆன்லைனில் ஆர்டர் பண்ணுங்க..உங்க வீட்டுக்கே மீன் கொடுத்து அனுப்புறோம்..! அமைச்சர்  அதிரடி!  

ஆன்லைனில் ஆர்டர் செய்தால், வீட்டிற்கே மீன் கொண்டு வந்து தரப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்து உள்ளார்.

40 நாட்கள் தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் அவரவர் வீட்டில் முடங்கி இருக்கின்றனர். இதனால் நினைத்த நேரத்தில் நினைத்த பொருட்களை வாங்க முடியாமல் தவித்து வருகின்றனர். அதே வேளையில் அத்தியாவசிய பொருட்களை மட்டும் வாங்குவதற்கு நேரம் கொடுக்கப்பட்டு உள்ளது.

இந்த ஒரு நிலையில் அசைவ பிரியர்களுக்கு மகிழ்ச்சி தரும் விஷயமாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி www.meengal.com என்ற இணையதளத்தில் ஆன்லைனில் பதிவு செய்தால், வீட்டிற்கே மீன் கொண்டுவந்து கொடுக்கப்படும் என குறிப்பிட்டு உள்ளார்.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்,

"தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகம் பொதுமக்களுக்கான சில்லரை விற்பனை திட்டத்தை மேலும் விரிவுபடுத்தும் நோக்கத்தில் "இது நம்ம ஊரு மீன்கள்" என்ற வணிக அடையாளத்தினை அறிமுகம் செய்துள்ளது. இந்த நிலையில் meengal என்ற கைபேசி செயலி உருவாக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. ஊரடங்கு உத்தரவு இருக்கக்கூடிய இந்த காலகட்டத்தில் மக்கள் அனைவரும் பயன் பெறும் வகையில் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது. 

இதன் மூலம் தேனாம்பேட்டை,அண்ணா நகர்,விருகம்பாக்கம், சாந்தோம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9.30 மணி முதல் பகல் 12.30 மணி வரை தரமான மீன்களை வீட்டிற்கே சென்று விநியோகம் செய்திடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வசதியை அடுத்து வரும் சில நாட்களில் சென்னையின் மற்ற அனைத்து பகுதிகளிலும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.