ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திற்கு பரஸ்பர வசதியை அளிக்‍காத ஏர்டெல், ஐடியா, வோடாஃபோன் ஆகிய நிறுவனங்களுக்‍கு 3 ஆயிரத்து 50 கோடி ரூபாய் அபராதம் விதிக்‍க தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் பரிந்துரைத்துள்ளது. 

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் ஜியோ தொலைத்தொடர்பு சேவை நிறுவனத்தை கடந்த செப்டம்பர் மாதம் 5-ம் தேதி வர்த்தக ரீதியாக தொடங்கியது. இதனால், ஏர்டெல், ஐடியா உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவன பங்குகளின் விலை சரிந்தன. பரிசோதனை ரீதியாக முதல் 3 மாதங்களுக்‍கு அனைத்து அழைப்புகள், 4ஜி வேகத்தில் இணையதள வசதி உள்ளிட்ட அனைத்து சேவைகளும் இலவசமாக வழங்கப்படும் என்று ஜியோ நிறுவனம் அறிவித்தது. இதனையடுத்து ஜியோ சிம்கார்டுகளை வாங்க கடும் போட்டி நிலவியது. 

இந்நிறுவனத்தின் இணையதள சேவை தடையின்றி கிடைத்தாலும், அதிலிருந்து அழைப்புகளை மேற்கொள்வதில் பிரச்சினை நீடித்து வருகிறது. முக்‍கியமாக ஜியோவில் இருந்து ஏர்டெல், ஐடியா, வோடாஃபோன் எண்களை எளிதில் தொடர்புகொள்ள முடியாத நிலை உள்ளது. இந்த 3 நிறுவனங்களும் பரஸ்பர தொடர்பு வசதியை தங்கள் நிறுவனத்திற்கு அளிக்‍காததே காரணம் என்று ஜியோ குற்றம்சாட்டியுள்ளது. இதனை பரிசீலித்த டிராய் மத்திய தொலைத்தொடர்புத்துறைக்‍கு பரிந்துரை அனுப்பியுள்ளது. இதனிடையே, பரஸ்பர தொடர்பு வசதியை அளிக்‍காத ஏர்டெல், ஐடியா, வோடாஃபோன் ஆகிய நிறுவனங்களுக்‍கு 3 ஆயிரத்து 50 கோடி ரூபாய் அபராதம் விதிக்‍க டிராய் பரிந்துரைத்துள்ளது.