உலக அளவில் 85 லட்சத்து 86 ஆயிரத்து 718 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 4 லட்சத்து 56 ஆயிரத்து 468 பேர் உயிரிழந்துள்ளனர். சிகிச்சை பெற்று வருவோரில் , 54ஆயிரத்து 566 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதுவரை 45 லட்சத்து 36 ஆயிரத்து 46 பேர் கொரோனாவின் கோர பிடியில் இருந்து மீண்டு வந்துள்ளனர். கொரோனா தொற்றிற்கு இதுவரை அதிகாரப்பூர்வ தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், சமூக விலகல் ஒன்றே தற்போது வரை சரியான தீர்வாக உள்ளது. இதனால் உலகின் ஏராளமான நாடுகள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளன. 

என்ன தான் ஊர் முழுக்க லாக்டவுனாக இருந்தாலும் கொரோனாவை எதிர்த்து போராடும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரத்துறை பணியாளர்கள், காவல்துறையினர் ஆகியோர் இரவு, பகல் பாராமல் தங்களது பணியை தொடர்ந்து வருகின்றனர். கொரோனா போன்ற நெருக்கடி நேரத்தில் கொத்து, கொத்தாக மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளை சமாளிப்பது என்பது மருத்துவர்களுக்கு மிகப்பெரிய சவாலாகும். மனதளவிலும், உடலளவிலும் மிக மோசமான பாதிப்புகளை எதிர்கொண்டாலும் மருத்துவர்கள் தங்களை தங்களே மோட்டிவேட் செய்து கொண்டு பணியை தொடர்ந்து வருகின்றனர். 

தற்போது உலகம் இருக்கும் இக்கட்டான சூழ்நிலையில் அதை காக்கும் சூப்பர் ஹீரோக்களாக மக்கள் மருத்துவர்களையும், செவிலியர்களையுமே பார்க்கின்றனர். சூப்பர் ஹீரோக்கள் அளவிற்கு புகழப்பட்டாலும், அவர்களும் மனிதர்கள் தானே... கொரோனா வார்டில் பணியாற்றுவது குறித்து பெண் மருத்துவர் ஒருவர் எழுதியுள்ள உருக்கமான கவிதை கண்களில் நீரை வரவழைக்கிறது. இதோ அந்த கவிதையை நீங்களே வாசித்து பாருங்கள்... 

இதோ நிறைவுபெறுகிறது 
என் 14 நாட்கள் வனவாசம்...! 
இதுவரை கண்டதில்லை இத்தனை நீளமான அமானுஷ்யமான 12 மணிநேரங்கள்..!

 "கடவுளே இன்று என்னை
 கொரொனா தாக்கக் கூடாது"
அனுதினமும் தொடங்கியது என்னை
அறியாத பிரார்த்தனைகளுடன்...! 

இதுவரை பயந்ததில்லை என் 
அன்பினும் மேலான என் 
நோயாளிகளின் அருகில் செல்ல..

HIV யும் கடந்தோம்..
Hep B யும் கடந்தோம்..
இப்போது மனம் சலனமடைந்தது
இன்னும் மிச்சமுள்ள எங்கள் கனவுகளை எண்ணி...

5 மாதங்கள் ஆயின குடும்பத்தை பிரிந்து..
அன்று அறியவில்லை அம்மாவின்
 கைவிட்டு நான் கிளம்பியபோது..

இதுவரை கழற்றியதில்லை 
என் ஆசை தங்கchain ஐ..
இன்று ஆனது 15 நாட்கள் 
ஆசைகள் முற்றும் துறந்து..

Mask இட்டு விட்டேன்.
கழட்டினால் கொரொனா..
தாகமா? உயிரா?
நாவறண்டு கடந்துகொண்டிருந்தது நேரம் காலம்...

"மூச்சு முட்டியது...சுவாசிக்க முடியவில்லை..
உயிரே போயிடும்"
இல்லை இது என் பேஷண்ட் இல்லை..
12 மணிநேரம் N95 mask இட்ட நாந்தான்..

வியர்த்துக் கொட்டியதுண்டு.. 
மயக்கம் வந்து தரையிலும் சாய்ந்ததுண்டு...
 PPE ஐ கழட்டி எறியும் எண்ணமும் வந்ததுண்டு..
ஆனால் முதல்நாளில் 
 அம்மாவின் உயிர் பிரிந்து
அவன் அழுத முகம் என்னை
 இன்னும் இயக்கிக்
கொண்டிருந்தது...

செவி மடல்களில் காயம்
நெற்றி முழுதும் வீரத்தழும்புகள்
மூக்கின் மேல் வரையப்பட்ட வரையறைகள்
"அய்யோ சின்ன pimple" என்று 
சிணுங்கிய நானேதான் இன்று 
தொடர்ந்து 12 மணிநேரம் இட்டு
Mask கழற்றிய இக்கோலத்தில்..

Duty முடித்து தினம் தினம் தலைகுளித்து
சேர்ந்துக்கொண்ட ஜலதோஷமும்
தும்மினாலே "கொரானா" வாய் இருக்குமோ என்ற குழப்பமும் பயமுமாய்
தூக்கமின்றி கழிந்தன இரவுகள்..

"டாக்டர் சாப்பாடு taste eh தெரியமாட்டேங்குது"

"சீக்ரமே சரியாய்டும்"

 கொரோனா நோயாளிக்கு ஆறுதல் கூறி முடித்தபோது நினைவு வந்தது..
 இரவு 7 மணிக்கு உண்டுவிட்டு 
Duty கிளம்பி
காலை 10 மணிக்கு duty முடித்து குளித்து
 பச்சை தண்ணீர் முதன்
முதல் படுகையில் 
15 மணிநேரம் பட்டினிபோட்ட என்னை 
சபித்துக்கொண்டிருந்தன
அசிடிட்டியால் வெந்து போன என் உணவுப்பாதைகள்...

வெறும் கொரோனா மட்டும் இல்லை
Corona+ HIV positive
Corona + Active TB
Corona + Hep B positive
இப்படி எங்களை எப்போதும் 
Thriller modeஇலேயே வைத்துப் பழகியது வாழ்க்கை ...

வீட்டின் நல்லது கெட்டதுக்கு சென்று வெகுநாள் ஆனது...
இங்கு நல்லதும் கெட்டதும் நானாகி வெகுநாளாகிப்போனதால்..
சின்னஞ்சிறு பிஞ்சின் வாசனை
மட்டுமே நினைவில் கொண்டு
தவிக்கும் சித்தி நானொருத்தி...!

சற்றே சிதைந்து தான் போனேன்
தன் மெல்லிய விரலை spo2 காக
 நீட்டுவது மட்டுமே செய்து கொண்டிருந்த அந்த தாத்தா அதையும் ஒரு நாள் நிறுத்தி கொரொனாப்
போரில் முழுதாய் தோற்றதால்..

"Bathroom  போகனும் டாக்டர்" என
சென்ற பெண்ணை நான்
 இரண்டு நிமிடங்களில் சடலமாகத்தான் காணநேர்ந்தது...
 
தோற்றது நானா? 
ஒவ்வொரு இரவிலும் cut செய்து கொண்டிருந்தேன்
அம்மாவின் ஆசை call களை
"பேசுற mood LA இல்ல" என்றவாறே
"இது எங்கள் கைமீறி போய்விட்டதோ"?
என்று சிறு கண்ணீருடனே...

Death certificate எழுதியெல்லாம் வருடங்கள் ஆனது...
ஆனால் இன்று அது என் diaryயில் ஒரு பக்கமாய் ஒவ்வொரு நாளும்
 "covid யுத்தம்"  என்னும் அத்தியாயத்தில்....

"டாக்டர் உங்களுக்கு நியாபகம் இருக்கா? 
நீங்கதான் என் அப்பாக்கு cataract operation பண்ணீங்க"
PPE யை மீறி என்னை அடையாளம் கண்ட கொரொனா நோயாளி நினைவூட்டி சென்றாள்
நான் பயின்று கொண்டிருந்தது 
கண் மருத்துவம் என்று
PPE க்கு பின்னால் இருக்கும் என் அடையாளத்தை நான் மறந்ததால்...

என்னை மருத்துவர்
 என்றறிந்த கடைக்காரர்
மீதி சில்லறையை கீழே வைத்தார்
இடையில் ஒரு கயிறு கட்டினார்
நேற்று என் முகத்தில் இருமிய என்
நோயாளியின் கொரோனா இன்று 
என் கைகளின் வழியே அவரை தேடுமாம்..
பயம் கண்டு சிரித்து கடந்தேன்
தீண்டாமை சாதியில் மட்டுமில்லை
மகத்தான தொழிலுக்கும் உண்டென்று...

மீண்டும் மீண்டும் maskஇற்குள்
மறுசுவாசித்த  என் carbon dioxide...!!
வலியால் வெடித்து கொண்டிருந்த என் தலையும்
திணறிக்கொண்டிருந்த என் மூச்சும்
Patient இன் oxygen cylinder கண்டு
ஏக்கமாய் கடந்தது....

இன்று நீ...நாளை நான்...
எவரும் எப்போதும்
என கொரோனா தாக்கலாம்..
இவ்வாறாய் தயாராகிக் கொண்டிருந்த
கல் நெஞ்சமொன்று 
வெகு விரைவில் கருகிவிட்ட
என் டாக்டர் இனத்தின் உயிர்களை
கண்டு சுக்குநூறாய் உடைந்து 
போய்க்கொண்டிருந்தது
 ஒவ்வொரு நாளும்..

"என் புள்ள சின்ன புள்ள டாக்டர்
ஆயிரம் கனவு இருக்கு..
எப்டியாச்சு காப்பாத்தி தாங்க"
அழுது முடித்த 30 வயது மகனின் 
அன்னையினை ஆசுவாசப்படுத்தியபோது
என்னையும் அறியாமல்
"பத்திரமா duty க்கு போய்ட்டுவாமா...
நம்ம குலதெய்வம் உனக்கு துணையிருக்கும்" 
என்று கலங்கிய என் அப்பாவின் கண்களில் தள்ளாடிக்கொண்டிருந்த
 என் 26 வயது கனவுகள் நினைவு வந்தது...! 

" எனக்கு ரொம்ப பயமா இருக்குமா"
சன்னமாய் கேட்டது 
வெளியில் வீர உடை அணிந்த "covid warrior" 
தன் அம்மாவிடம் வீரத்தை துறந்து குழந்தையாய் அழுதபோது...!

"என்னால முடியல..போதும்
I'm giving up" என்ற போது..
"We are doctors..we should fight this" 
என்று தேற்றினான் சக மருத்துவ நண்பன்..

"டாக்டராய் பட்டம் பெற்றுவிட்டோம்...
இனி உயிர் காப்பது மட்டுமே என் கடமை. 
இப்போரில் என் உயிரே போனாலும்"
என் N95,PPE அணிகலனை அணிந்துகொண்டு கொரோனா போருக்கு நான் தயாராகிக் கொண்டிருந்தபோது சற்றே கண்களில் பட்டது செய்தித்தாளின் ஒரு வரி

"Shopping mallகள் open செய்தாலும்
சினிமா தியேட்டர்கள் open செய்தால்தான்
இழந்த களை மீண்டும் கிடைக்கும்"

"Bars,Restaurants எல்லாம் திறந்தால் தான்
 CP திருவிழா காணும்" 

"கொரோனாவால் மரித்த டாக்டரின்
 உடலை எரிக்க இடம் மறுத்து
துரத்திய மக்கள்"

படித்துவிட்டு சற்றே சலனமில்லாமல்
நகர்ந்தேன்...
எதற்காக...யாருக்காக??
எதுவும் கேட்கத் தெம்பில்லை
பதில் எனக்கு ஏற்கனவே தெரிந்ததால்..

14 நாட்களில் 4 இறப்புகளை கண்டாலும்
குணமடைந்து வீட்டுக்கு கிளம்பிய
புன்னகையயை மட்டும் என்
நாட்குறிப்பில் குறித்துக் கொண்டு
நாட்களை கடத்தினேன்....

"இந்த PPE kit போட்டுகிட்டு மூச்சு திணறதுக்கு, 
பேசாம கொரொனா வந்தே 
செத்து போயிடலாம் நான்" 
உடல் களைத்த ஒரு சக மருத்துவரின் 
வரிகளை கடந்து சென்றேன்...

இந்த போரில் மாய்ந்த 
அனைத்து சக மருத்துவர்களின்
 முடிவடையா கனவுகளும்,
ஆன்மாவும் சாந்தியடைய 
என் ஆயிரம் பிரார்த்தனைகள்...

யாரும் அங்கீகரிக்கவேண்டாம்...
மாய்ந்தபின் இழப்பீடு வேண்டாம்..
வாழும்போது கேட்கிறோம் சிறு மதிப்பினை
நாங்கள் கற்று தேர்ந்த மருத்துவதிற்கு....

இதயத்தில் அடித்த ராயல் சல்யூட்களுடன்
கோடி நன்றிகள் கூறுகிறேன்

இந்த கொரோனா யுத்ததில் 
போர் செய்யும் 
அனைத்து மருத்துவர்களுக்கும்
அவர் பெற்றோருக்கும்...

பட்டு உடை உடுத்தி அலங்காரம் செய்தபோதும் இல்லை...
முதன் முதலாய் தோன்றுகிறது...
Super Hero - Heroinee மருத்துவர்கள் தான் என...!

COVID-19
கொஞ்சம் இரக்கம் காட்டியிருக்கலாம்..
ஆனால்...
தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சி
தன் மெய் வருத்தக் கூலி தரும்...
இதுவே இன்று எங்கள் தாரக மந்திரம்..!

மாயும் வரை மீட்போம்...!

மருத்துவர்கள் தான்.......
ஆனால்....
"நாங்களும் மனிதர்கள்தான்"....! 

-டாக்டர். ஜனனி ராஜகோபால்