Father's Day 2023: தன்னலமற்ற அன்பின் அடையாளம்! தந்தையர் தினம் ஏன் கண்டிப்பா கொண்டாட வேண்டும் தெரியுமா?
Father's Day 2023: குடும்பத்தைப் பொறுப்பாக வழிநடத்தும் அக்கறையான தந்தைகள் ஒவ்வொருவரும் ஆண்டு முழுவதும் கொண்டாடப்பட வேண்டியவர்கள் தான்.
ஒரு குழந்தைக்கு அன்னை எவ்வளவு முக்கியமானவரோ அதே அளவு தந்தையும் முக்கியம். இருவரின் அரவணைப்பிலும் குழந்தைகள் வளரும்போது தான் கூடுதல் பாதுகாப்புணர்வுடன் இருக்கிறார்கள். குழந்தைகளுக்கு தங்கள் வாழ்வில் தாயும் தந்தையும் எவ்வளவு முக்கியமானவர்கள், அவர்களின் அன்பும், தியாகமும் எவ்வளவு விலைமதிப்பற்றது என்பதை சொல்லும் விதமாகவும், அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவும் தான் இந்த நாள்கள் கொண்டாடப்படுகின்றன. வரும் ஜூன் 18ஆம் தேதி உலக தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது.
அன்னை ஒரு குழந்தையை ஒவ்வொரு விஷயங்களையும் சொல்லி சொல்லி வளர்ப்பது போல தந்தைகள் வளர்ப்பதில்லை. தங்கள் வாழ்வின் மூலம் வழிகாட்டுகிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். அதனால் தான் பெரும்பாலான குழந்தைகளுக்கு தங்களுடைய தந்தை முன்மாதிரியாக (role model) இருக்கிறார்கள்.
முதல்முதலாக தந்தையர் தினத்தை கொண்டாட வேண்டும் என்ற கருத்தை சொனோரா டாட் கூறியபோது பலர் சிரித்தனர். ஏனென்றால் பழங்காலம் தொட்டு தாய் மட்டுமே ஒரு குழந்தையின் ஒரே வளர்ப்பாளராகக் கருதப்படுகிறார். தாயுடன் ஒப்பிடும்போது தந்தையின் பங்கு பெரும்பாலும் இரண்டாம்பட்சம் தான். உண்மையில் ஒரு குழந்தைக்கு தாய் எவ்வளவு முக்கியமோ அதே அளவு தந்தையும் முக்கியம் என்பது நம் அனைவருக்கும் தெரியும். குழந்தைகள் தங்கள் ஆன்மீக, உணர்ச்சி, உடல், நிதி மற்றும் சமூக நலனுக்காக தங்கள் தந்தையை சார்ந்துள்ளனர்.
மகள்களை பொருத்தவரை, தந்தை தான் உலகின் தலைசிறந்த மனிதர். அவர்கள் வணங்கும் முதல் மனிதர். மகன்களுக்கு, தந்தை தான் முன்மாதிரி. அவர்கள் பின்பற்ற விரும்பும் வலிமையான மனிதர். பாரம்பரியமாக தந்தை என்பவர் குழந்தைகளுக்கான வழங்குநராகவும் வழிகாட்டியாகவும் காணப்பட்டாலும், இன்றைய தனிக்குடும்ப குடும்ப கலாச்சாரத்தில் அது மாறிவிட்டது.
பெரும்பாலான கணவன்-மனைவி வேலை செய்வதால், தாய்மார்களைப் போலவே தந்தையும் குழந்தை வளர்ப்பு வேலையில் ஈடுபட்டுள்ளனர். இன்று, பெரும்பாலான அப்பாக்கள் குழந்தைகளின் டயாப்பர் மாற்றுவதில் இருந்து அல்லது குழந்தையை தூங்க வைப்பது போன்ற பணியை செய்ய வெட்கப்படுவதில்லை. இந்த கலாச்சார மாற்றம் தந்தை-குழந்தை உறவை மேலும் வலுப்படுத்த உதவுகிறது.
இதையும் படிங்க: Negative Thinking: எப்பவுமே எதிர்மறை சிந்தனையா? இந்த கதையை படிச்சா ஆளே மாறிடுவீங்க!
தந்தையர் தின விழா முக்கியத்துவம்:
தந்தையர் தின விழாவானது, ஒவ்வொரு அப்பாவின் நிபந்தனையற்ற அன்புக்கும் பாசத்திற்கும் நன்றி தெரிவிக்கும் வாய்ப்பை வழங்குகிறது. தந்தையர் தினத்தை கொண்டாடுவது தந்தைகளின் பங்களிப்பு சமூகம் மற்றும் குழந்தைகளால் அங்கீகரிக்கப்படுவதை உணர்த்தும் வகையில் அமைகிறது. ஆகவே தங்களைப் பற்றி பெருமை கொள்கிறார்கள்!
தந்தையர் தினத்தை கொண்டாடுவதன் மூலம், குழந்தைகள் தங்கள் தந்தையுடன் இன்னும் நெருங்கி வருகிறார்கள். தந்தையர் தினக் கொண்டாட்டம் அவர்களின் வாழ்க்கையில், தந்தை வகிக்கும் முக்கிய பங்கைப் பற்றி சிறிது நேரம் சிந்திக்க வைக்கிறது. இது அவர்களின் தந்தையால் வழங்கப்படும் தன்னலமற்ற கவனிப்பு, பாதுகாப்பைப் பாராட்ட ஒரு வாய்ப்பாகும். இதனால் தங்கள் அப்பாவுடன் உணர்ச்சி ரீதியாக நெருக்கமாக வருகிறார்கள்.
குழந்தைகள் அன்றைய முழு வாய்ப்பையும் பயன்படுத்திக் கொண்டு, தந்தையர்களுக்கு முழு மனதுடன் நன்றி தெரிவிக்க வேண்டும். அதற்கு மிகப்பெரிய காரியம் எல்லாம் கூட செய்ய வேண்டாம். தந்தையை புன்னகைக்க செய்யும் வகையில் சின்ன வார்த்தை, ஒரு பூ அல்லது 10 நிமிடம் அங்கிருந்து ஒரு உரையாடல் கூட போதும்.
இதையும் படிங்க: Mothers Day 2023: ஒவ்வொரு அம்மாவும் கொண்டாடப்பட வேண்டியவர்! அன்னையர் தின வரலாற்று முக்கியத்துவம் தெரியுமா?