வியாழக்கிழமையன்று இப்படி செய்வதால் அடுத்தது கல்யாணம் தானாம்..! தெரியுமா உங்களுக்கு..? 

வியாழக்கிழமை விரதம் இருந்தால் திருமண தடை நீங்கும் என்ற ஐதீகம் உண்டு. ஆனால் அது எந்த வியாழக்கிழமை? எத்தனை நாட்கள் செய்ய வேண்டும்? எப்படி விரதம் இருக்க வேண்டும்? அப்படி இருந்தால் வேறு எந்தெந்த பயன்கள் கிடைக்கும் என்பது குறித்த முழு விவரத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

பொதுவாக வியாழக்கிழமை என்றாலே அது குருபகவானுக்கு உகந்த நாள் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே..."சுக்லபட்சம்" என சொல்லப்படும் வளர்பிறையில் வரக்கூடிய வியாழக்கிழமைகளில் இந்த விரதத்தை மேற்கொள்ளலாம். அதாவது ஒரு வருடத்தில் இதுபோன்ற வியாழக்கிழமை 16 முறை வரும். இந்த வியாழக்கிழமைகளில் விரதம் இருப்பது மிகுந்த நன்மைகளை கொடுக்கும். இதுபோன்ற விரதத்தை தொடர்ந்து மூன்று ஆண்டுகள் செய்து வந்தால் குரு பகவானின் பூரண அருள் வாழ்நாள் முழுவதும் அந்த ஒரு நபருக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரகஸ்பதி என குறிப்பிடப்படும் வளர்பிறை வியாழக்கிழமை அன்று குரு பகவானுக்கு விரதம் இருப்பவர்கள், அன்றைய தினத்தில் காலை எழுந்தவுடன் தலைக்கு குளித்து, மஞ்சள் நிற ஆடையை அணிந்து, எதையும் அருந்தாமல் அருகே உள்ள நவகிரக கோவிலுக்கு சென்று குரு பகவானை வழிபட வேண்டும். குரு பகவானுக்கு மஞ்சள் நிறப்பூக்கள் சாற்றி, மஞ்சள் நிற இனிப்புகளை வைத்து நைவேத்தியம் செய்து, சந்தனம் மஞ்சள் போன்றவற்றை கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும்.

அதாவது மஞ்சள் நிறத்திலேயே அனைத்தும் பயன்படுத்தி மகிமை பெறுவதற்கான அறிகுறி இது. அதன்பின்னர் குங்குமப்பூ கலந்த பசும்பாலை கொண்டு குரு பகவானுக்கு அபிஷேகம் செய்து வழிபடுவது மிகவும் சிறந்தது. முக்கியமாக இந்த விரதம் மேற்கொள்பவர்கள் அன்றைய தினத்தில் உணவு எதுவும் உண்ணக்கூடாது. மேலும் அன்றைய நாள் முழுவதும் குரு பகவான் தொடர்பாக மந்திரங்கள் சொல்லி பகவானை வழிபடுவது மிகவும் சிறந்தது.

அதேபோன்று அன்றைய தினத்தில் மாலை நேரத்தில் ஆடைகள், இனிப்புகள் என மற்றவர்களுக்கு தானம் செய்யலாம். தானம் செய்து முடித்த பிறகு விரதத்தையும் முடித்துக் கொள்ளலாம். இவ்வாறு மூன்று வருடங்கள் வளர்பிறை வியாழக்கிழமைகளில் விரதம் இருந்து  வந்தால் வாழ்வில் குரு பகவானின் அருள் என்றென்றும் இருக்கும்.பல யோகங்கள் வந்து சேரும் என்பது ஐதீகம்.

குறிப்பாக திருமண தடை நீங்கும். ஜாதகத்தில் இருக்கக்கூடிய கிரகதோஷம் எதுவாக இருந்தாலும் கழிந்துவிடும். தொழில் வியாபாரத்தில் வருமானம் பெருகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். இது போன்று பல நன்மைகளை குரு பகவான் விரதம் மூலம் பெற முடியும் என்பது ஐதீகம்.