உஷார்..! டிச.1 முதல் டோல்கேட்டில் மாபெரும் மாற்றம்..! "பாஸ்ட்டேக்" இல்லை என்றால் 2 மடங்கு கட்டணம் உயர்வு..!

சுங்க சாவடிகளில் வரும் டிசம்பர் ஒன்றாம் தேதி முதல் "பாஸ்ட்டேக்" இல்லாமல் பயணிக்கும் வாகனங்கள் இரண்டு மடங்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டும் என தற்போது அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பொதுவாக சுங்கச்சாவடிகளில் வாகனங்களின் வகைகளுக்கு ஏற்ப வழித்தடங்களும் பிரித்து விடப்பட்டு உள்ளது. அதன் வழியே வாகனங்கள் கடந்து செல்லும். இந்த நிலையில் டோல்கேட்டில்  வாகன நெரிசலை கட்டுப்படுத்தும் பொருட்டு விரைவாக பயணிக்க "பாஸ்ட்டேக் டிஜிட்டல்" கட்டண திட்டம் கொண்டுவரப்பட்டு இருந்தது. இதன் வழியே பாஸ்ட் டேக் வாகனங்கள் செல்லும்போது, அங்கு நிற்க வேண்டிய அவசியம் கிடையாது. இதன் காரணமாக ஒவ்வொரு வாகனமும் விரைவாக கடந்து செல்லும். இந்த வழியில் மற்ற வாகனங்கள் வந்தால் அவர்களிடம் இரண்டு மடங்கு கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படும் என தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையம் இதுகுறித்து தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், ஒரு நாளைக்கு சுமார் 6 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்கள் சென்றால் ஒரு லட்சத்து 50 ஆயிரம் வாகனங்கள் மட்டுமே பாஸ்ட்டேக் வசதி கொண்டவையாக உள்ளது. இதன் காரணமாக மற்ற வாகன உரிமையாளர்களும் பாஸ்ட்டேக்  வசதியைப் பெறுவதற்கு வரும் 9 ஆம் தேதி வரை கால அவகாசம் கொடுத்து அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு இந்த வசதியை பெறும் பட்சத்தில் ரேடியோ அதிர்வெண் அடையாள தொழில்நுட்பத்தில் இந்த பாஸ்டேக் செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதாவது இதில் இருக்கக்கூடிய RFID எனப்படும் ரேடியோ அதிர்வெண் டோல்கேட் அருகில் சுமார் 20 முதல் 25 மீட்டர் தொலைவில் வரும்போதே, வாகன விவரங்களை எடுத்துக்கொள்ளும். எனவே அங்கு நின்று போக வேண்டிய அவசியமே இருக்காது.

பாஸ்ட்டேக் பெறுவதற்கு ஆர்சி புக், லைசன்ஸ், ஆதார் கார்டு, இருப்பிட சான்று உள்ளிட்டவை போதுமானது. ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட வாகனங்களை வைத்திருந்தால் ஒவ்வொன்றுக்கும்  தனித்தனியாக பாஸ்டேக் பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அனைத்து வாகனங்களும் பாஸ்ட்டேக் வசதி பெற்றுவிட்டால் டோல நீண்ட நெரிசல் ஏற்படுவதையும் தவிர்க்கலாம். மேலும் நாம் நேரம் தாழ்த்தாமல் விரைவில் பயணிக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.