Asianet News TamilAsianet News Tamil

கொரோனா தடுப்பூசியால் மலட்டுத்தன்மை ஏற்படுமா?... மருத்துவர் கூறும் விளக்கம் என்ன?

கொரோனா தடுப்பூசி மலட்டுத்தன்மையை ஏற்படுத்தாது என நோய்த்தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனை குழுவின் கோவிட்-19 செயற்குழு தலைவர் டாக்டர். நரேந்திர குமார் அரோரா தெரிவித்துள்ளார்.

Dr. N.K. Arora says COVID-19 vaccines do not cause infertility
Author
Delhi, First Published Jun 25, 2021, 7:00 PM IST

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டால் மலட்டுத் தன்மை ஏற்படும் என வதந்தி பரப்பப்பட்டு வருகிறது. அதற்கு மத்திய சுகாதாரத்துறை விளக்கத்தை தொடர்ந்து, கோவிட்-19 செயற்குழு தலைவர் டாக்டர். நரேந்திர குமார் அரோராவும் விளக்கமளித்துள்ளார். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் ஓடிடி சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: இந்தியாவில் தயாரிக்கப்பட்ட  ஸைடஸ் காடிலா நிறுவனத்தின் உலகின் முதல் டிஎன்ஏ-பிளாஸ்மிட் தடுப்பூசியை நாம் விரைவில் பெறப் போகிறோம். உயிரியல்-இ என்ற புரத தடுப்பூசியையும் நாம்  விரைவில் எதிர்பார்க்கலாம். இந்த தடுப்பூசிகளின் பரிசோதனைகள், ஊக்கம் அளிப்பதாக உள்ளன. இந்த தடுப்பூசி செப்டம்பருக்குள் கிடைக்கும் என நம்புகிறோம். இந்திய எம்-ஆர்என்ஏ தடுப்பூசியை 2-8 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் பாதுகாக்க முடியும். இதுவும் செப்டம்பருக்குள் கிடைக்கும்.

Dr. N.K. Arora says COVID-19 vaccines do not cause infertility

சீரம் இந்தியா நிறுவனத்தின் நோவாவேக்ஸின் தடுப்பூசி மற்றும் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் தடுப்பூசியும் விரைவில் வரவுள்ளன. ஜூலை 3வது வாரத்துக்குள், பாரத் பயோடெக் மற்றும் சீரம் இந்தியா நிறுவனத்தின் தடுப்பூசிகள் உற்பத்தி அதிகரிக்கப்படவுள்ளன.  இது நாட்டின் தடுப்பூசி விநியோகத்தை அதிகரிக்கும். ஆகஸ்ட் மாதத்துக்குள், மாதம் ஒன்றுக்கு 30 முதல் 35 கோடி தடுப்பூசி டோஸ்களை கொள்முதல் செய்ய முடியும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். இதன்மூலம் நாள் ஒன்றுக்கு ஒரு கோடி பேருக்கு தடுப்பூசி போட முடியும்.

Dr. N.K. Arora says COVID-19 vaccines do not cause infertility

போலியோ தடுப்பு மருந்து இந்தியா மற்றும் உலகின் மற்ற நாடுகளில் கொடுக்கப்பட்டபோது, இந்த மருந்துகளை எடுத்து கொள்ளும் குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் மலட்டுதன்மை ஏற்படலாம் என வதந்திகள் பரப்பப்பட்டன.  இதுபோன்ற தவறான தகவலை, தடுப்பூசிக்கு எதிரான அமைப்பினர் பரப்புகின்றனர்.  அனைத்து தடுப்பூசிகளும், தீவிர அறிவியல் ஆராய்ச்சிக்குப் பின்புதான் வெளிவருகின்றன என்பதை நாம் அறிய வேண்டும். எந்த தடுப்பூசிக்கும் இது போன்ற பக்க விளைவுகள் இல்லை. இது போன்ற பிரச்சாரம் மக்களை தவறாக வழிநடத்தும்.  நமது முக்கிய நோக்கம், கொரோனாவிலிருந்து நம்மையும், நமது குடும்பம் மற்றும் சமூகத்தையும் காப்பதுதான்.  ஆகையால், தடுப்பூசி போட அனைவரும் முன்வர வேண்டும் என அவர் கூறினார்.

Follow Us:
Download App:
  • android
  • ios