திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்வதற்கு சென்னை தி நகர் மற்றும் மயிலாப்பூர் தலைமை அஞ்சலகங்களில் டிக்கெட் புக்கிங் செய்ய சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

2015 ஜூலை 1-ஆம் தேதி டிஜிட்டல் இந்தியா திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் கீழ் அஞ்சல் துறையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் அஞ்சல் ஆயுள் காப்பீடு, கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு, மணி ஆர்டர் செய்வது, இ-தபால் உள்ளிட்ட பல்வேறு பணிகள் செய்யப்பட்டு வருகின்றன.

இதுதவிர அஞ்சலகங்களில் ஆதார் பெறுவதற்கான வசதியும் ஏற்பட்டுள்ளதால் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சென்ற ஆண்டு மட்டுமே 20 ஆயிரம் பேருக்கு மேல் ஆதார் சேவை வழங்கி சென்னை மத்திய மண்டல அஞ்சல் துறை இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது என்பது கூடுதல் தகவல். இதற்கிடையில் தி நகர் மற்றும் மயிலாப்பூர் தலைமை அஞ்சல் நிலையங்களில் திருப்பதி கோவிலுக்கு செல்வதற்கான முன்பதிவு செய்யும் ஏற்பாடுகள் அமலுக்கு வந்துள்ளது.

இதன் மூலம் ஒருவர் தனது ஆதார் அட்டையின் மூலமாக 5 பேருக்கு முன்பதிவு செய்யலாம். ஒருவருக்கு 300 ரூபாய் டிக்கெட் கட்டணம். இந்த சேவை காலை 10 முதல் மாலை 4 மணி வரை செயல்படும்.

இந்த அனைத்து சேவைகளையும் தவிர பாஸ்போர்ட், ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட பல்வேறு சேவைகளும் அஞ்சல் நிலையங்களில் வழங்கப்படுவது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த அனைத்து தகவலையும் சென்னை நகர மண்டல அஞ்சல் துறை மூத்த கண்காணிப்பாளரான அலோக் ஓஜா தெரிவித்து உள்ளார்.