நாடு முழுவதும் இந்த மாதத்தில் தினமும் சராசியாக 1,000 பேர் கொரோனாவல் இறக்கின்றனர். இதனால், தற்போது இந்தியாவில் கொரோனா பலி எண்ணிக்கை 78,000-ஐ கடந்துள்ளது. 

உலகளவிலான ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில், அமெரிக்காவிற்கு அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது. ஆனால், கடந்த மாதத்தில் இருந்து தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் அமெரிக்காவை விட இந்தியாவில் தான் அதிக எண்ணிக்கை பதிவாகின்றன. இந்நிலையில் கொரோனா தடுப்பூசி குறித்து பேசிய மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் “கொரோனா தடுப்பூசிக்கு அவசர அங்கீகாரம் வழங்க இந்தியா பரிசீலித்து வருகிறது. ஒருமித்த கருத்து இருந்தால், நாங்கள் அதை முன்னெடுத்துச் செல்லலாம், குறிப்பாக மூத்த குடிமக்கள் மற்றும் அதிக ஆபத்தில் உள்ள மக்களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

இந்த அவசர அங்கீகாரம் மூலம் 3-ம் கட்ட சோதனைகளின் காலக்கெடுவை குறைக்க முடியும். இதனால், மருத்துவ பரிசோதனைகளில் எந்த குறையும் இருக்காது. பாதுகாப்பு மற்றும் செயல்திறனை அரசு உறுதி செய்யும்போது மட்டுமே தடுப்பூசி கிடைக்கும். தடுப்பூசி வெளியிடுவதற்கான தேதி எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. ஆனால், சோதனைகளின் கூடுதல் முடிவுகள் 2021 முதல் காலாண்டில் நிச்சயம் தடுப்பூசி கிடைக்கும். பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு தடுப்பூசிகளை வழங்குவது தொடர்பான பல்வேறு சிக்கல்களை ஆராய ஒரு தடுப்பூசி நிபுணர் குழு சமீபத்தில் அரசாங்கத்தால் நிறுவப்பட்டுள்ளது”என்று தெரிவித்தார்.

கடந்த சில நாட்களாக இந்தியாவில் சராசியாக 90,000-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. கொரோனா ஊரடங்கால் ஏற்பட்ட பொருளாதார இழப்பை சரிசெய்ய அன்லாக் என்ற பெயரில் மத்திய அரசு தளர்வுகளை அறிவித்த பிறகு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.