12-15 வயதுடைய சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி...ஏன் அவசியம்..? யாருக்கு கூடாது? முழுவதும் தெரிந்து கொள்ளுங்கள்
Covid vaccine for children: 12 வயது முதல் 15 வயது சிறார்களுக்கு கொரோனா தொற்றில் இருந்து பாதுகாப்பு அளிக்கும் வகையில், 'கோர்ப்வேக்ஸ்’ தடுப்பூசி செலுத்தும் பணி புதன்கிழமை (மார்ச் 16) முதல் தொடங்கியுள்ளது.
12 வயது முதல் 15 வயது சிறார்களுக்கு கொரோனா தொற்றில் இருந்து பாதுகாப்பு அளிக்கும் வகையில், 'கோர்ப்வேக்ஸ்’ தடுப்பூசி செலுத்தும் பணி புதன்கிழமை (மார்ச் 16) முதல் தொடங்கியுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளா நாம் கொரோனா தொற்றின் பிடியில் சிக்கி தவித்து வந்த நிலையில், சமீப நாட்களில் அதன் எண்ணிக்கை குறைந்து 100 கீழே சென்றுள்ளது. இந்த செய்தி நமக்கு மகிழ்ச்சியை தந்தாலும், அடுத்த அலை வந்துவிடுமோ என்ற அச்சத்தில். மக்கள் பயணித்து கொண்டிருக்கின்றனர்.
உலக நாடுகள் அனைத்தும் கரோனா நோய் தொற்றினை கட்டுப்படுத்த, பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். நாள்தோறும் புதிய புதிய அப்டேட்கள் வந்து கொண்டு தான் இருக்கிறது. இருப்பினும், கொரோனா, புதிய புதிய வடிவங்களில் உருமாறி நம்மை தாக்கி கொண்டு தான் இருக்கிறது.
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி:
இந்தியாவில் கடந்த ஆண்டு ஜனவரியில் துவங்கிய, கொரோனா தடுப்பூசி போடும் பணி முதலில் பெரியவர்கள், செவிலியர்கள் ஆகியோருக்கு முன்னுரிமை அளித்து செலுத்தப்பட்டது. பின்னர், நடுத்தர வயது உடைய மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதைத் தொடர்ந்து 15 வயது முதல் 18 வயது வரையிலான சிறார்களுக்கு கோவேக்ஸின் தடுப்பூசி மட்டுமே செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
‘கோர்ப்வேக்ஸ்’ தடுப்பூசி:
சிறார்களுக்கு ‘கோர்ப்வேக்ஸ்’ தடுப்பூசி. புரதம் நிறைந்த துணைப் பிரிவு தடுப்பூசி ஆகும். முன்னதாக, 12 வயது முதல் 18 வயதினருக்கு கோர்ப்வேக்ஸ் தடுப்பூசி செலுத்துவதற்கு இந்திய மருந்து ஒழுங்காற்று ஆணையத்திடம் இருந்து கடந்த பிப்ரவரி மாதம் 21ஆம் தேதி ஒப்புதல் பெறப்பட்டது. இந்த தடுப்பூசி இரண்டு டோஸ்களை கொண்டது. கோ-வேக்ஸின் ஊசியைப் போலவே இந்த ஊசியும் 28 நாள் இடைவெளியில் செலுத்தப்படுகிறது.
எப்படி பதிவு செய்வது?
ஆரோக்கிய சேது ஆப் மூலமாக, பெற்றோரின் மொபைல்போனை பயன்படுத்தி குழந்தைக்கு தடுப்பூசி போட பதிவு செய்யலாம்.
சரிபார்ப்பிற்கு தேவையான OTP ஜெனரேட் செய்யப்படும்.
குழந்தையின் ஆதார் அட்டை அல்லது 10ஆம் வகுப்பு அடையாள அட்டை ஆகியவற்றின் மூலமாகவும் பதிவு செய்து கொள்ளலாம்.
உங்களுக்கு அருகாமையில் உள்ள தடுப்பூசி மையத்தை அணுகி, பதிவு செய்து கொண்ட சமயத்தில் தவறாமல் சென்று தடுப்பூசி செலுத்திக் கொள்ளவும்.
குழந்தைக்கு தடுப்பூசி ஏன் அவசியம்?
குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதின் மூலம் தொற்று ஏற்படுவதையும், கொரோனா வைரஸ் பரவுவதையும் இது தடுக்க உதவுகிறது.
மேலும், கொரோனா பாதிப்பிற்கு பிறகு ஏற்படும் உடல் உபாதைகளை இது தடுக்கிறது. எனவே, 12 முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது நல்லது என்கின்றனர் மருத்துவர்கள்.
குழந்தைகளுக்கு பக்கவிளைவுகள் உள்ளதா..?
சில குழந்தைகளுக்கு ஊசி போட்ட இடத்தில் தலைவலி, உடல்வலி, காய்ச்சல் மற்றும் சோர்வை உணரலாம். இருப்பினும், இந்த பக்க விளைவுகள் இரண்டு நாட்களில் சரியாகி விடும். இருப்பினும், இவைகள் அதிகமாக இருக்கும் பட்சத்தில் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறலாம்.
யாருக்கு தடுப்பூசி போட கூடாது?
நோய்த்தொற்றுகள் மற்றும் வேறு ஏதேனும் தற்போதைய நோய் உள்ள குழந்தைகளுக்கு, மருத்துவரின் ஆலோசனை பெற்று தடுப்பூசி போடுவது அவசியம். அதே நேரத்தில், தடுப்பூசியின் உட்பொருட்களுக்கு ஒவ்வாமை ஏற்பட்டதாக அறியப்பட்ட குழந்தைக்கு தடுப்பூசி போடக்கூடாது.