குழலினிது யாழினிது என்பதம் மக்கள்

மழலைச்சொல் கேளா தவர்

- அதாவது குழந்தைகளின் கொஞ்சல் மொழியை கேட்காதவர்கள் தான், குழலின் ஓசையும், யாழின் இசையும் இனிமையானது என்று கூறுவார்கள் என்பது வள்ளுவரின் வாக்கு. ஆக, குழலையும், யாழையும் விட இனிமையான மொழியை கேட்க வேண்டும் என்றால், அவர்களுக்கு பிள்ளைச் செல்வம் வேண்டும்.

 

ஆனால், திருமணம் ஆகி பல ஆண்டுகளாகியும் குழந்தைப்பேறு கிடைக்கவில்லை என்று கருதுபவர்கள், இரண்டு மந்திரங்களை உச்சரித்தால், குழந்தைப் பாக்கியம் உண்டாகும். பூர்வ புண்ணியம் இருந்தால்தான் புத்திர பாக்கியம் கிடைக்கும் என்கிறது ஜோதிடம். ஆனாலும், இரண்டு விதமாக இருக்கும் சந்தான கோபால மந்திரத்தை உச்சரித்தால், குழந்தை பேறு உண்டாகும் என்று கூறுகிறது ஆன்மிகம்.

சந்தான கோபால மந்திரம் என்பது, குழந்தைக் கண்ணனை வழிபடும் மந்திரமாகும். இந்த மந்திரம் இரண்டு விதமாக உள்ளது.

முதல் மந்திரம்

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்ளெம்

தேவகி ஸுத கோவிந்தா: வாசுதேவ ஜகத்பதே

தேஹிமே தனயம் கிருஷ்ணா த்வாமஹம் சரணம் கத:

பொருள்: தேவகி மைந்தனாக இருக்கிற வாசுதேவா, உலகத்துக்கெல்லாம் பதியாக இருக்கக்கூடிய பகவானே, எனக்கு நல்ல பிள்ளை கிடைக்க, உன்னை சரண் அடைகிறேன்.

இரண்டாவது மந்திரம்

தேவ தேவ ஜகந்நாதா கோத்ர வ்ருத்திகர ப்ரபோ

தேஹிமே தனயம் சீக்ரம் ஆயுஷ்பந்தம் யசஸ்விமம்

பொருள்: தேவர்களுக்குத் தேவனே, ஜகந்நாத பகவானே! என் குலம் அபிவிருத்தி அடைய எனக்குச் சீக்கிரமே தீர்க்காயுளுடன் நல்ல குணங்களும் கூடிய பிள்ளையைக் கொடு!

இந்த மந்திரங்களை முறைப்படு உபதேசம் பெற்று பகவான் கிருஷ்ணரை நினைத்து வழிபட வேண்டும். மேலும், தேன், நெய், கற்கண்டு ஆகிய திரிமதுர திரவியத்தால், 10,000 முறை ஹோமம் செய்து, ஒரு லட்சம் முறை மந்திரத்தை உச்சரித்தால் குழந்தைப் பேறு உண்டாகும்.

மேலும், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே வடசேரி கிருஷ்ணன் கோயில், கும்பகோணம் சாரங்கபாணி கோயில் கருவறையில், ஆதிசேஷன் மீது பள்ளி கொண்டுள்ள குழந்தை உருவ கிருஷ்ணன் விக்கிரகம், கர்நாடக மாநிலம் தொட்டமளூரில் உள்ள நவநீத கிருஷ்ணன் ஆலயம் ஆகியவற்றில் தம்பதிகள் சென்று, மனமுருகி வழிபட்டாலும், குழந்தை பாக்கியம் உண்டாகும். மேலும் உடுப்பியில், பிரதிஷ்டை செய்யப்பட்ட கிருஷ்ணர் விக்கிரகத்தை வழிபட்டு வேண்டிக் கொண்டாலும், குழந்தைப்பேறு உண்டாகும்.