மீண்டும் துவங்குகிறது ஸ்ரீபெரும்பதூர் நோக்கியா ஆலை..! 60 ஆயிரம் பேருக்கு வேலை காத்திருக்கு இளைஞர்களே..! வேலைக்கு தயாராகுங்கள்...! 

சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வந்த பிரபல நோக்கியா கம்பெனி மூடப்பட்டிருந்த ஒரு விஷயம் நமக்கு தெரிந்ததே... ஆனால் மீண்டும் அதற்கு ஓர் புத்துயிர் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதாவது இந்த ஆலையில் ஐபோன்களுக்கு சார்ஜர் தயாரிக்கும் நிறுவனம் ஒன்று பணியை தொடங்க ஆயத்தமாகி உள்ளது. இந்த தகவலை மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் உறுதி செய்துள்ளார். அதன்படி அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் இந்த ஆலையில் சார்ஜர் தயாரிக்கும் பணி தொடங்க உள்ளது. 

நோக்கியா நிறுவனத்தை பொருத்தவரையில் கடந்த 2006 ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் புதிய தொழிற்சாலையை அமைத்து தனது உற்பத்தியை தொடங்கியது. பின்னர் மாபெரும் வளர்ச்சி அடைந்து 2009 ஆம் ஆண்டு மிகப்பெரிய நிறுவனமாக உருவெடுத்தது.பிறகு தமிழக அரசியலில் ஏற்பட்ட வரி தொடர்பான விஷயத்தில் சற்று அடிபட்டு போனது. இதன் காரணமாக 2013-ம் ஆண்டு ஐடி ரெய்டு நடத்தப்பட்டது.

21 ஆயிரம் கோடிக்கு மேல் நோக்கியா நிறுவனம் வரி செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது. இதன் விளைவாக நோக்கிய உற்பத்தி செய்த போன்கள் அனைத்தும் உள்ளூர் சந்தையில் விற்கப்பட்டதற்கு 2400 கோடியை தமிழக அரசுக்கு செலுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

பின்னர் ஆலையை தொடர்ந்து நடத்த முடியாமல் போனதால் இந்த நிறுவனத்தை மைக்ரோசாப்ட் நிறுவனம் ஏற்று நடத்தக் கூடிய சூழல் உருவானது. அதன் விளைவாக ஏற்கனவே வேலை செய்து வந்தவர்களில் வெகுவாக ஆட்களை குறைத்து 850 ஊழியர்களை மட்டுமே வைத்து வேலை வாங்கியது. பின்னர் மைக்ரோசாப்ட் நிறுவனமும் கைவிட்டு 2014 ஆம் ஆண்டு நவம்பர் ஒன்றாம் தேதி இந்த ஆலை நிரந்தரமாக மூடப்பட்டது. 

இதற்கிடையில் ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் எக்ஸ்ஆர் மாடலை இந்தியாவில் உற்பத்தி செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போன் ஏற்றுமதி செய்யப்படுவது மட்டுமல்லாமல் உள்நாட்டிலும் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு தேவையான சார்ஜரை தயாரிக்க நோக்கியா ஆலையை பயன்படுத்த உள்ளது. இந்த செயலை சால்காம்ப் என்ற நிறுவனம் எடுத்து நடத்த உள்ளது. சார்ஜர் தயாரிக்கும் பணி வரும் ஆண்டு மார்ச் மாதம் முதல் துவங்கும் என்றும் இதன் காரணமாக குறைந்தது நேரடியாகவே 10,000 பேருக்கும் மறைமுகமாக 50 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மத்தியில் ஆளும் பாஜக இரண்டாவது முறையாக மீண்டும் ஆட்சியை பிடித்த பின் வேலையில்லா திண்டாட்டம் நாளுக்கு நாள் பெருகி வருகிறது என தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில், தமிழகத்தில் இதன் மூலம் 60,000 பேருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.