பால் பொருட்களை சாப்பிட முடியாதவர்களுக்கு கால்சியம் சத்து பெறுவதற்கு மாற்று உணவுகள் இருக்கிறது. அவை என்னென்ன, என்பதை கீழே பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
உண்ணும் உணவுப் பொருட்களிலேயே பால் மிகவும் இன்றியமையாத ஒன்று. பால் சுவையுடன் இருப்பதோடு, சத்துக்கள் அதிகம் நிறைந்த உணவுப் பொருளும் கூட. பாலில் நல்ல தரமான புரதம், கொழுப்பு,சிறிய அளவில் மாவுச்சத்து, மக்னீசியம் போன்ற பலவிதமான சத்துக்கள் உள்ளன.

மற்ற பொருட்களில் இல்லாத சில சத்துக்கள் பாலில் உள்ளதால் நாம் எல்லோரும் 500 மி.லி. அளவு பாலைக் கண்டிப்பாக தினசரி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். மேலும், ஊட்டச்சத்துகளில் மிகவும் முக்கியமான கால்சியம் பாலின் மூலம் பெறப்படுகிறது. கால்சியம் சத்து, பால், தயிர், மோர், வெண்ணெய் பாலாடைக்கட்டி என்று அனைத்து வகையான பால் பொருட்களிலும் நிரம்பியுள்ளது.
கால்சியம் சத்து எலும்பு மற்றும் பற்களுக்குத் தேவையான ஆரோக்கியத்தையும் வலுவையும் கொடுக்கிறது. கால்சியம் சத்து குறைப்பாட்டால் உடலின் ஒட்டுமொத்த நிலைத்தன்மை பாதிக்கப்படும் அபாயம் இருக்கிறது. கால்சியம் சத்து தசையை இயக்குவதற்கும், நரம்பு மண்டலம் செய்தியை மூளைக்கு எடுத்துச் செல்வதற்கும் அவசியம்.

ஆனால் பால் பொருட்களை சாப்பிட முடியாதவர்களுக்கு கால்சியம் சத்து பெறுவதற்கு மாற்று உணவுகள் இருக்கிறது. ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 1000 எம்ஜி கால்ஷியமாவது சாப்பிட வேண்டும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகிறார்கள்.
பால் பருக பிடிக்காதவர்கள், கால்சியம் சத்து எதிலிருந்து பெறுவது என்பதை பற்றிய விவரங்களை இங்கே பார்க்கலாம்.
சோயா பால்:
பால் பொருட்கள் சாப்பிட முடியவில்லை என்று வருத்தப்படுபவர்களுக்கு, சோயா பால் நல்ல மாற்றாக உள்ளது. பசும்பாலில் இருக்கும் அதே அளவுள்ள கால்சியம், சோயா பாலிலும் இருக்கறது.
விதைகள்:
பூசணி விதைகள், எள்ளு, கசகசா உள்ளிட்ட பல்வேறு விதைகளில் கால்சியம் சத்து அதிகமாக உள்ளது. ஒரு ஸ்பூன் கசகசாவில் 127 எம்ஜி கால்சியம் உள்ளது என்கின்றனர் நிபுணர்கள்.

பாதாம்:
வைட்டமின் E சத்து மற்றும் கனிமச்சத்துக்களில் நிறைந்துள்ள பாதாமில், நீங்கள் ஓரளவுக்கு கால்சியம் பெறலாம். 30 கிராம் பாதாமில் 75 எம்ஜி கால்சியம் உள்ளது. தினமும் ஒரு கைப்பிடி அளவு பாதாம் சாப்பிட்டு வரலாம்.
பருப்பு வகைகள்:
கடலைப் பருப்பு, பாசி பருப்பு, மசூர் தால் உள்ளிட்ட பல்வேறு பருப்பு வகைகளில் அதிக அளவு கால்சியம் உள்ளது. தினமும் ஏதும் ஒரு வகை பருப்பை சேர்ப்பது மூலம், லாக்டோஸ் இன்டாலரன்ஸ் உள்ளவர்கள் தேவையான கால்சியம் பெறலாம். குறிப்பாக, உளுந்தில் எலும்புகளை வலுவாக்கும் சத்து இருக்கிறது.

டோஃபு:
பனீருக்கு மாற்றாக சோயாவில் இருந்து தயாரிகப்படும் டோஃபுவைப் பயன்படுத்தலாம். இதில் கால்சியம் சத்து மட்டுமல்ல, அதிக புரதமும் உள்ளது மற்றும் குறைவான கலோரி கொண்ட உணவாகும். பால் பொருட்கள் ஒவ்வாமை உள்ளவர்களுக்கு டோஃபு மிகச்சிறந்த உணவாகும்.
