தமிழகத்தில் பருவமழை தீவிரமாக பெய்து வருவதால் ஒரு வாரத்துக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை இருப்பு வைத்துக்கொள்ள தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

கடந்த சில தினங்களாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. இந்நிலையில் மழைக்காலங்களில் பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

 

அதில், ’’மழை பெய்து வருவதால் இடி, மின்னல்கள் அடிக்கடி ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. அதனால் பொதுமக்கள் குடைகளை உபயோகப்படுத்தக் கூடாது.  மரத்தின் அடியில் நிற்க கூடாது. திறந்தவெளியில் இருக்கக் கூடாது. நீர்நிலைகளில் குளிக்க கூடாது. நீர்வரத்து அதிகரித்து வருவதால் கடல், ஆறு, ஏரி, குளம் மற்றும் குட்டை போன்ற நீர் நிலைகளில் குளிக்கவோ கடந்து செல்லவோ வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

 

தொடர்ந்து மழை பெய்து வருதால் பொதுமக்கள் பழைய கட்டிடங்களில் தங்குவதோ, அருகில் செல்லவோ வேண்டாம். அவ்வாறு பழைய கட்டடங்களில் தங்கி இருப்பவர்கள் உடனடியாக வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் மெழுகுவர்த்திகள், தீப்பெட்டிகள், எரிவாயு, மண்ணெண்ணெய், மருந்து, பேட்டரிகள், டார்ச்கள், முகக்கவசங்கள் உள்ளிட்ட  அத்தியாவசிய பொருட்களை ஒரு வாரத்திற்கு இருப்பு வைத்துக்கொள்ள தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.