40 ஆண்டுகளுக்கு பிறகு அத்திவரதர் வைபவம் இன்று கோலாகல தொடக்கம்:

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறக்கூடிய அத்திவரதர் வைபவம் இன்று கோலாகலமாக தொடங்கியது. இந்த அற்புத காட்சியை காண்பதற்காக திரளான பக்தர்கள் இன்று காலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்ய செய்து வருகின்றனர்.

வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள அனந்த சரஸ் குளத்தின் நீரில் இருக்கும் அத்திவரதர் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை பக்தர்களுக்கு தரிசனம் கொடுப்பார். இதற்கு முன்னதாக 1979ஆம் ஆண்டு ஜூலை 2ஆம் தேதி அத்திவரதர் வைபவம் நடைபெற்றது. அதன் பின்பு 40 ஆண்டு கழித்து இன்றுதான் மீண்டும் அத்திவரதர் பக்தர்களுக்கு தரிசனம் கொடுக்க தொடங்கி உள்ளார். 

கடந்த வெள்ளிக்கிழமை அன்று குளத்தில் இருந்து எடுக்கப்பட்ட அத்திவரதர் சிலை, நீர் வடிவதற்காக வைக்கப்பட்டு  தைலக்காப்பு உள்ளிட்ட பல சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர் இன்று அதிகாலை முதலே தரிசனம் தொடங்கியது. இந்த விழாவை காண பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் இப்போதே வர தொடங்கி உள்ளனர்.காஞ்சிபுரத்தில் இதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் நேற்று முன்தினம் பார்வையிட்டார். விழாவின் முதல் நாளான இன்று அத்தி வரதரை தரிசனம் செய்ய தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் காஞ்சிபுரம் வந்தடைந்தார். 

வெளியிலிருந்து வரும் பக்தர்களுக்கு எந்த இடையூறு இல்லாமலும் தரிசனம் செய்வதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி தற்காலிக பேருந்து நிலையங்கள், சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.  மாற்றுத்திறனாளிகளுக்கு பேட்டரி கார் வசதியும் செய்யப்பட்டுள்ளது. கோவிலின் உள்ளேயே மருத்துவ முகாமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பது கூடுதல் தகவல். அத்தி வரதர் வைபவத்தை 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே பார்க்க முடியும் என்பதால், லட்ச கணக்கான பக்தர்கள் காஞ்சிபுரம்  வர  தொடங்கி உள்ளனர். 

ஒரு வேளை  இந்த முறை அத்தி வரதர் தரிசனத்தை பார்க்க முடியாமல் போனால், மீண்டும் 40 ஆண்டுகள் கழித்தே பார்க்க முடியும். அந்த வகையில், அடுத்த வைபவம் 2059 ஆம் ஆண்டு தான் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே  நீண்ட ஆண்டுகளாக அத்தி வரதர் தரிசனத்திற்காக காத்திருந்தவர்கள் இந்த ஆண்டே பார்த்து விடுவது  நல்ல வாய்ப்பாக அமையும். இல்லை என்றால் மீண்டும் 40 வருடங்கள் காத்திருக்க வேண்டியது தான்...!