மோடிக்கு வாழ்த்து! கட்கரியிடம் பிட்டு..!

தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக உள்ள நிலையில் நேற்று  அமித்ஷா அளித்த தடபுடலான விருந்தில் 36 கூட்டணி கட்சிகள் பங்கேற்றுள்ளன. தேசிய ஜனநாயக கூட்டணி-2 அமைப்பது குறித்தான தீர்மான செயல்திட்டத்தில் மோடியும், அமித்ஷாவும் கையெழுத்திட்டனர். இந்த கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

அதன் படி, 2022க்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் வகையில், செயல்திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இது பயங்கரவாத எதிர்ப்பு, பணமோசடி மற்றும் பூவி வெப்பமயமாதல் ஆகிய பகுதிகளில் இந்தியா எப்படி பாதிப்படைகிறது என்பதையும் இந்த செயல்திட்டம் குறிப்பிட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக நாட்டுக்கு தங்கள் சேவையை வழங்கிய மத்திய அமைச்சர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டமாக இந்த கூட்டம் நடத்தப்படுகிறது என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. கூட்டத்தில் கலந்துகொண்ட அனைத்து தலைவர்களும் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வரும் என்றும், நரேந்திர மோடி மீண்டும் பிரதமர் ஆவார் என்று உறுதியுடன் தெரிவித்தனர்.

இந்த ஆலோசனை கூட்டம் மற்றும் விருந்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட சில அமைச்சர்கள், பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ், தேமுதிக சார்பில் பிரேமலதா விஜயகாந்த், எல்.கே.சுதீஷ், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், புதிய நீதிக்கட்சி ஏ.சி.சண்முகம், புதிய தமிழகம் கிருஷ்ணசாமி உள்ளிட்ட தமிழக தலைவர்களும் கலந்துகொண்டனர் 

இந்த கூட்டத்தில் பார்க்கப்பட்ட மிக முக்கிய நிகழ்வாக மோடிக்கு நிகராக அதிகம் கவனம் ஈர்த்தவர் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி என்பது தான். மேடைக்கு சென்று மோடிக்கு வாழ்த்து தெரிவித்தவர்கள் அனைவருமே தவறாமல் நிதின் கட்கரி இருந்த இடம் தேடிச் சென்று வணக்கம் வைத்து விட்டு சென்றுள்ளனர் என்றால் பாருங்களேன். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட தமிழக கூட்டணி கட்சி தலைவர்களும் நிதின் கட்கரியிடம் சென்று வணக்கம் போட்டுவிட்டு புன்னகையோடு அந்த இடத்தை விட்டு நகர்ந்து உள்ளனர்.