வளைச்சு வளைச்சு பிடிக்கிறாங்க போலீஸ்..! சென்னை மக்களே உஷார்.!  சம்பாதனை முழுதும்  அபராதம் செலுத்தவே போதாது..! 

சென்னையில் சைதாப்பேட்டை நந்தனம் தேனாம்பேட்டை கிண்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போக்குவரத்து போலீசார் பல அதிரடி சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். மோட்டார் வாகன சட்டத்தின்படி சமீபத்தில் விதிமுறைகளை மீறுபவர்கள் மீது அபராதம் விதிக்கப்படும் முறை கடுமையாக்கப்பட்டது. அதன்படி முன்பு பொது அபராதமாக இருந்த ரூபாய் 100 தற்போது 500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதே போன்று உரிமம் இல்லாமல் வாகனத்தை ஓட்டினால் 1000 ரூபாயிலிருந்து 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது. அதிவேகமாக வாகனத்தை இயக்கினால் ரூ.400  லிருந்து 2,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது, போதையில் வாகனம் ஓட்டினால் 2,000 ரூபாயிலிருந்து 10,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது, ஹெல்மெட் அணியாமல் சென்றால் ரூ.100 லிருந்து 1000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. 

மேலும் பல்வேறு விதிமுறைகள் மற்றும் அபராத முறைகள் அமல்படுத்தப்பட்டு உள்ளது. எனவே தற்போது சென்னை முழுவதுமே ரோட்டுக்கு ரோடு, தெருவுக்கு தெரு, சிக்னலுக்கு சிக்னல் என எங்கு பார்த்தாலும் போக்குவரத்து போலீசார் உடன் தமிழக காவல் துறையினரும் இணைந்து வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

முன்பெல்லாம் பெண்கள் சிறு பிள்ளைகள் என்றால் சரி போகட்டும் என விட்டு விடுவார்கள்... ஆனால் தற்போது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. பெண்களாக இருந்தாலும் பெரியவர்களாக இருந்தாலும் 18 வயதிற்கு குறைவானவர்களாக இருந்தாலும், வாகன சோதனைக்கு உட்படுத்துகிறார்கள். எனவே பொதுமக்களாகிய நாம் இதனை ஓர் விழிப்புணர்வாக எடுத்துக் கொண்டு கட்டாயம் ஹெல்மெட் அணிந்து போக்குவரத்து விதி முறைகளை கடைபிடிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.