கொரோனா பாதிப்பால் சிறுமிக்கு கண் பார்வையில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ள சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முதலில் கொரோனா பாதிப்பு சளி, இருமல், காய்ச்சல் என்ற அறிகுறியும் மற்றும் எவ்வித அறிகுறியு்ம் இல்லாமல் தொற்று பரவி வந்தது. இதனையடுத்து, சிலருக்கு நுகரும் தன்மை குறைந்து எவ்வித வாசனையும் தெரியாமல் தொற்று பரவுகிறது. மேலும், கொரோனா பாதித்த சிலருக்கு நுரையீரல் மற்றும் பல்வேறு பக்க விளைவுகள் ஏற்படுவதாக தொடர்ந்து செய்திகள் வெளி வந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில, டெல்லியில் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த அரசு பல்வேறு கட்ட நடவடிக்கையை எடுத்து வருகிறது. கொரோனா தொற்றால், நரம்பு பாதிக்கப்பட்ட காரணத்தால், 11 வயது சிறுமியின் கண் பார்வை மங்கலாகி உள்ளதாக டில்லி எய்ம்ஸ் தெரிவித்துள்ளது. கொரோனாவின் இது போன்ற பக்க விளைவுகள் முதன் முறையாக கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் அச்சிறுமிக்கு, வைரஸ் தொற்றால் மூளை நரம்பு சேதம் ஏற்பட்டது எனவும் எய்ம்ஸ் தெரிவித்துள்ளது. சிறுமியின் உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அத்துடன் நோய் பாதிப்பு குறித்த அறிக்கையையும் தயாரித்து வருகின்றனர்.