3 மாதங்களுக்கு முன்பு காணாமல் போன 2 வயது குழந்தையை போலீசார் பத்திரமாக மீட்டனர்.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு, செய்யூரை அடுத்த பவுஞ்சூர் பகுதியில் நரிக்குறவர் தம்பத்தையரான வெங்கடேசன்- காளியம்மாள் இவர்களின் 2 வயது பெண் குழந்தை காணாமல் போனது. கடந்த அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி, பவுஞ்சூர் வாரச்சந்தைக்கு  தங்களின் தொழிலுக்காக சென்ற இந்த தம்பதி, இரவு நீண்ட நேரமாகியதால் அங்கேயே உறங்கி உள்ளனர்.

அப்போது, உறக்கத்தின் நடுவே கண் விழித்து பார்த்த போது, அருகில் உறங்கி கொண்டிருந்த குழந்தை காணாமல் போயுள்ளது. பின்னர் எங்கு தேடியும் இந்த குழந்தை கிடைக்கவில்லை என்பதால், இது குறித்து தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்திடம் தங்கள் குழந்தையை மீட்டு தரக்கோரி கோரிக்கை வைத்தனர்.

அதுமட்டுமல்லாமல்,10 நாட்களுக்கு மேலாகியும் குழந்தை கிடைக்காததால் குழந்தையின் தாய் காளியம்மாள் உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாள்களும் செய்து இருந்தார். மேலும், இது குறித்து அணைக்கட்டு காவல் நிலையத்தில் வழக்கும் பதியப்பட்டு, 3 தனிப்படை போலீசார் குழந்தையை தேடும் பணியில் தீவிரமாக இறங்கினர். 

பின்னர் மூன்று மாதம் கழித்து இன்று அந்த குழந்தையை மீட்டெடுக்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.குழந்தையை பார்த்த சந்தோஷத்தில், பெற்றோர்கள் நிம்மதி பெருமூச்சு அடைந்து, ஆனந்த கண்ணீர் விட்டனர். மேலும் குழந்தையை மீட்க உறுதுணையாக இருந்த போலீசார் மற்றும் மற்றவர்களுக்கும் தங்களது நன்றியை தெரிவித்துக்கொண்டனர்.