பெண் குழந்தை பெற்றதற்கு மனைவிக்கு "முத்தலாக்"..!  கதறும் மனைவி..! 

ஆண் குழந்தை பெற்று கொடுக்காததால் முத்தலாக் கொடுத்து மனைவியை விவாகரத்து செய்துள்ள சம்பவம் தெலுங்கானா மாநிலத்தில் நடந்து உள்ளது.

ஹைதராபாத்தில் வசித்து வரும் மெஹ்ராஜ் பேகம் சில மாதங்களுக்கு முன்பு ஓர் அழகிய பெண் குழந்தையை பெற்றெடுத்தார். அவருடைய கணவருக்கு ஆண் குழந்தை பிறக்கும் என எதிர்பார்ப்பு இருந்துள்ளது. இதற்கிடையில் பெண் குழந்தையை பெற்றெடுத்ததை காரணமாக காட்டி, முத்தலாக் கூறி விவாகரத்து பெற்று வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இந்த நிலையில் இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் தெரிவிக்கும்போது, "எனக்கு நீதி கிடைக்கும் கண்டிப்பாக தவறு செய்தவருக்கு தண்டனை கிடைக்கும் என நம்புகிறேன்" என தெரிவித்துள்ளார்

இதற்கு முன்னதாக கடந்த 2017 மற்றும் 18 ஆம் ஆண்டுகளில் மத்திய அரசு முத்தலாக் தடை செய்ய மசோதா கொண்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் கடந்த பிப்ரவரி மாதம் 21ஆம் தேதி இதற்காக அவசர சட்டம் கொண்டு வரப்பட்டது.

இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சி பிடித்த பாரதிய ஜனதா கட்சி இரண்டு அவைகளிலும் மசோதாவை நிறைவேற்றி ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பி, பின்னர் கடந்த ஆகஸ்ட் ஒன்றாம் தேதி இந்த சட்டம் நடைமுறைக்கு வந்தது. இதன் மூலம் வாய்மொழியாகவோ, எழுத்து மூலமாகவோ, எஸ்எம்எஸ், வாட்ஸ்அப் உள்ளிட்ட எதன் மூலமாகவும் முத்தலாக் சொல்வது  குற்றம் என்றும்; சட்டவிரோதமானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனையும் மீறி செய்தால் அவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பெண்குழந்தை பெற்றதற்காக முத்தலாக் கூறி விவாகரத்து செய்து விட்டு மற்றொரு பெண்ணை திருமணம் செய்துள்ள இவருக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.