உங்கள் பணத்தைச் சேமிக்கவும், பட்ஜெட்டில் வாழவும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 6 வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா பெருந்தொற்றின் பொருளாதார சீர்குலைவினால், ஏற்படுத்தியுள்ள தாக்கம் நம்மில் பலரை, வாட்டி வதைக்கிறது. பெரும்பாலானோர், வீட்டில் இருந்து பணிபுரிகின்றனர். ஏராளமானோர் வேலை இழந்து வறுமையின் உச்சத்தில் உள்ளனர். குறிப்பாக, அன்றாட வியாபாரம் மூலமாக சாப்பிடும் சாலையோர வியாபாரிகள் செய்வதறியது திகைத்து உள்ளனர். இன்னும், சிலருக்கு, நம்முடைய தாத்தா பாட்டி காலத்தில் ஹிட் அடித்த ''பாமா விஜயம்'' படத்தில் வரும், வரவு எட்டணா செலவு பத்தணா என்ற பாடல் வரிகளுக்கு ஏற்றார் போல், நாட்கள் போய் கொண்டு இருக்கிறது.

இந்த நிலையில், வரவுக்கு அதிகமாக செலவு இருக்கிறது, எவ்வளவு சிக்கனப்படுத்தினாலும் சேமிக்க முடியவில்லை என்று கூறுவோருக்கு சேமிப்புத் திறனை மேம்படுத்த சில எளிய வழிமுறைகளை கவனத்தில் கொள்ள வேண்டும்.
மாதந்தோறும் பட்ஜெட்:
கண்டிப்பாக அனைவரது வீட்டிலும் மாதந்தோறும் பட்ஜெட் என்று ஒன்று இருக்கும். மாதாந்திர பட்ஜெட் நிலவரத்தை கண்டிப்பாக மாதந்தோறும் கண்காணிக்க வேண்டும். செலவு செய்தவற்றை எழுதிவைத்து மாத இறுதியில் எது தேவையுள்ள செலவு, தேவையற்ற செலவு எனப் பிரித்து அடுத்தடுத்த மாதங்களில் தேவையற்ற செலவுகளைத் தவிருங்கள். பணம் மிச்சமாகும்.
OTT சந்தா கட்டணம்:
டிவி பயன்பாட்டின் தொடர்புக்கு வெறும் 100 ரூபாய் கட்டணம் செலுத்தி அனைத்து, பல்வேறு channel களை கண்டு ரசித்தோம். ஆனால், இன்று பல டிவி பார்ப்பதற்கு பல OTT இயங்குதளங்கள் உள்ளன. இவை நம்முடைய சந்தா கட்டணத்தை அதிகரிக்கிறது. ஒவ்வொரு மாதமும், இரண்டு,மூன்று OTT இயங்குதளங்களுக்கு பணம் கட்டுவது ஆண்டின் இறுதியில் மிகவும் விலை உயர்ந்ததாக இருக்கும்.
எனவே, பணத்தைச் சேமிக்க, ஒவ்வொரு OTTக்கும் உங்கள் நண்பர்களுடன் சேர்ந்து சந்தா தொகையைப் பிரித்து கட்டுவது சிறந்த வழி. இது உங்களுக்கு பணத்தை மிச்சப்படுத்தும். மேலும், நீங்கள் பட்ஜெட்டில் வாழ்க்கையை நடத்த உதவும்.
கிரெடிட் கார்டைத் தவிருங்கள்:
இரண்டாவதாக, கடன்கள், கிரெடிட் கார்டுகள் மற்றும் தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதங்களை கண்காணியுங்கள். வழக்கமான செலவுகளைத் தவிர்த்து இவையெல்லாம் கூடுதல் செலவுகள் என்பதால் அதனை கண்காணித்து அதற்கேற்ப மற்ற செலவுகளை திட்டமிட்டுக்கொள்வது நல்லது. உங்கள் கிரெடிட் கார்டில் நிலுவையில் உள்ள வட்டி மற்றும் மாதாந்திர திருப்பிச் செலுத்தும் அட்டவணையை உருவாக்கி சரியான நேரத்தில் செலுத்த திட்டமிட்டு கடனை அடையுங்கள். கடனை செலுத்துவதற்கு உங்கள் இதர செலவுகளை குறைத்துக்கொள்ளுங்கள். இல்லையெனில் இந்த கடனை அடைக்க வேறு ஒரு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். முடிந்த அளவு உங்கள் கிரெடிட் கார்டில் செலவு செய்வதை தவிருங்கள்.

ஷாப்பிங் பட்டியலை சரிபார்க்கவும்:
உங்கள் ஷாப்பிங் பட்டியலில் மளிகை அல்லது பிற பொருள்களின் தேவைகள் குறித்துப் பாருங்கள். சிலர் தேவைக்கு அதிகமாக வாங்கி பின்னர் வீணாக்கலாம். எனவே, தேவையான பொருள்களை மட்டும் அளவோடு வாங்கலாம்.
உதாரணமாக சூப்பர் மார்க்கெட்டில் சென்று பார்ப்பதையெல்லாம் கூடையில் எடுத்துப்போடுவதைவிட வீட்டில் இருந்து அவசியம் தேவையான பொருள்களை மட்டும் லிஸ்ட் போட்டு எடுத்துச் செல்லுங்கள். பட்ஜெட் தொகையையும் குறைத்துக்கொள்ளுங்கள். லிஸ்டில் வாங்கியதுபோக மீத பணம் இருந்தால் மட்டுமே வேறு பொருள்களை வாங்க வேண்டும் என்று கணக்கில் வைத்துக்கொள்ளுங்கள்.
உணவு பிரியர்கள்:
உணவு ஆர்டர் செய்வதற்கென பிரத்தேகமான ஏராளமான செயலிகள் உள்ளன. இவை உணவு பிரியர்களை ஈர்க்கும் தன்மை கொண்டவை. எனவே, அடிக்கடி வெளியில் உணவு ஆர்டர் செய்து உண்ணும் பழக்கத்தை குறைந்து கொள்ளுங்கள். இவை பணம் மிச்சப்படுத்துவது மட்டுமின்றி உடல் ஆரோக்கியமாகவும் வாழலாம்.
ஆன்லைன் ஷாப்பிங்:
இதுதவிர, ஆடைகள், ஆபரணங்கள், வீட்டுக்குத் தேவையான பொருள்கள், ஆடம்பரப் பொருள்கள் வாங்குவதைக் குறைத்தால் சேமிப்பு கிடைக்கும். குறிப்பாக, ஆன்லைன் ஷாப்பிங் உங்களை மேலும் அடிமையாக்கும்.

பாமா விஜயம் படத்தில் வரும், நிலைமைக்கு மேலே நினைப்பு வந்தால் நிம்மதி இருக்காது
அய்யா நிம்மதி இருக்காது
அளவுக்கு மேலே ஆசையும் வந்தால் உள்ளதும் நிலைக்காது
அம்மா உள்ளதும் நிலைக்காது என்ற பாடல் வரிகளுக்கு ஏற்றார் போல் ஒவ்வொருவரும் செயல்பட வேண்டும்.
