ஆந்திராவில் 6 மாத பெண் குழந்தையின் உடலில் பட்டவுடன் பல்ப் எரியும் அதிசயத்தை பொதுமக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்து வருகின்றனர். 

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில், தாமலசெருவு கிராமத்தை சேர்ந்தவர் ஹரிபாபு. இவரது மனைவி சுஷ்மிதா. இவர்களுக்கு 6 மாத பெண் குழந்தை உள்ளது. இக்குழந்தையின் உடலில் ஏதோ மாற்றம் இருப்பதாக அதன் பெற்றோருக்கு சந்தேகம் எழுந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் ஹரிபாபு  மற்றும் அவரது மனைவி ஆகியோர் வீட்டு வேலையில் இருந்தனர். குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது. 

அப்போது ஏற்கனவே வாங்கி வைத்திருந்த எல்இடி பல்பை குழந்தை கையில் எடுத்துள்ளது. குழந்தை தொட்டதும் திடீரென அந்த பல்ப் எரிந்தது. இதனை கண்ட ஹரிபாபுவும் சுஷ்மிதாவும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் குழந்தையின் உடலில் வைத்தபோதும் அந்த பல்பு எரிந்துள்ளது. இதனால் உடனடியாக குழந்தையை தூக்கிச்சென்று அங்குள்ள தனியார் மருத்துவரிடம் காண்பித்தனர்.

இது தொடர்பாக மருத்துவர்கள் கூறுகையில் குழந்தை உடலில் மின்சாரம் இருப்பதாக தெரிவித்தனர். மனித உடலில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் மின்சாரம் இருக்கும். அதில் இக்குழந்தைக்கு கூடுதலாக இருப்பதால் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்கிறது. இதுபோல் லட்சத்தில், கோடியில் ஒருவருக்கு இருக்கும். இதனால் குழந்தைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையறிந்த சுற்றுப்புற கிராம மக்கள் ஏராளமானோர் குழந்தையை ஆச்சரியத்துடன் பார்த்தும் தங்களது செல்போனில் படம் எடுத்தும் செல்கின்றனர்.