கேரளாவில் கடும் மழையால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. மக்கள் உணவு, இருப்பிடம் இல்லாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக கொண்டு வரப்பட்ட அரிசி, கோதுமை மூட்டைகளை நள்ளிரவில் கலெக்டர் அலுவலகத்தில் யாரும் இல்லாததால், ஐஏஎஸ் அதிகாரிகள் இருவரும் தங்களின் தோளில் சுமந்து சென்ற சம்பவம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இருவரில் ஒருவர் தமிழ் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர் ஆவார். 

கேரளாவில் தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கேரள மாநிலத்தில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பெய்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக கேரளா வெள்ளத்தில் மிதக்கிறது. இதனால் அம்மாநில மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. இடுக்கி, வயநாடு, மலப்புரம், கோழிக்கோடு, பாலக்காடு உள்ளிட்ட பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 

இடுக்கி, வயநாடு, மலப்புரம், கோழிக்கோடு, பாலக்காடு உள்ளிட்டப் பகுதிகள் தான் அதிகம் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. அதிலும் கேரளாவில் உள்ள 14 மாவட்டங்களில் 7 மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. அங்கு நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 39-ஆக உயர்ந்துள்ளது. ஏராளமானோரை காணவில்லை. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்தப் பேய் மழையால் வயநாடு மாவட்டமும் தப்பவில்லை, ஆயிரக்கணக்கான மக்கள் அரசின் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் எர்ணாகுளம் மாவட்ட ஆட்சியர் முகமது சபிருல்லா மேற்பார்வையில் மீட்புப்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த மீட்புப்பணிகளுக்காக தமிழகத்தைச் சேர்ந்த ஜி ராஜமாணிக்கம், வயநாடு சப்-கலெக்டர் என்எஸ்கே உமேஷ் ஆகிய இருவரும் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், திங்கள்கிழமை வயநாடு பகுதியில் அனைத்து மீட்புப்பணிகளையும் முடித்துவிட்டு நள்ளிரவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு ராஜமாணிக்கமும், உமேஷும் வந்துள்ளனர். அந்தநேரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி, கோதுமை, பருப்பு, உள்ளிட்டவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தது. ஆனால் நிவாரணப் பொருட்களை இறக்கி வைப்பதற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் யாருமில்லை.

இதனால் மக்களுக்கான நிவாரணப் பொருள்களை தாங்களே தூக்கிச் செல்லும் புகைப்படங்கள், வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. மேலும், இரவு பகலாக அதிகாரிகள் பணியாற்றி வருவதாகக் கூறப்படுகிறது. மதுரை மாவட்டம் திருவாதவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம். இவர் மாநில உணவு பாதுகாப்புத்துறையின் ஆணையராக பணியாற்றுகிறார். இவரின் மனைவியும் ஐ.பி.எஸ் அதிகாரியுமான நிஷாந்தினியும் தற்போது கேரள மாநிலத்தில் பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவரும், தமிழகத்தில் அரசுப் பள்ளியில், ஏழ்மையான குடும்பங்களில் பிறந்து படித்து முன்னேறியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.