திருமண வீட்டார், தங்களின் வங்கிக் கணக்கில் இருந்து இரண்டரை லட்சம் ரூபாய் பணம் பெறும் நடைமுறை, இன்று முதல் அமலுக்கு வருகிறது.

கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று, கடந்த 8-ம் தேதியன்று பிரதமர் திரு.நரேந்திர மோடி அறிவித்தார்.

மேலும் பழைய ரூபாய் நோட்டுகளை வங்கியில் செலுத்தி, புதிய ரூபாய் நோட்டுகளை பொதுமக்கள் பெற்றுக் கொள்ளலாம் என்றும், வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை, வாரம் 24 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே எடுக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, தங்கள் வசமுள்ள 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள பொதுமக்கள் வங்கிகளில் குவிந்தனர். இதனால் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டது.

பணத் தட்டுப்பாடு மற்றும் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை எடுப்பதில் கட்டுப்பாடு போன்றவற்றால், திருமண வீட்டார், விவசாயிகள், வியாபாரிகள் பாதிக்கப்படுவதாக மத்திய அரசிடம் புகார்கள் குவிந்தன.

இதைத் தொடர்ந்து, திருமண வீட்டார் தங்களின் செலவுக்காக வங்கிக் கணக்கில் இருந்து ஒரே முறையில், மொத்தமாக இரண்டரை லட்சம் ரூபாய் வரை எடுத்துக் கொள்ளலாம் என்று மத்திய நிதியமைச்சகம் அறிவித்தது. இந்நடைமுறை, இன்றுமுதல் அமலுக்கு வருகிறது.

அதன்படி, இம்மாதம் 8-ம் தேதிக்கு முன் வங்கியில் டெபாசிட் செய்த பணத்தை மட்டுமே எடுக்க முடியும் - டிசம்பர் 30-ம் தேதிக்குள் நடக்கும் திருமணத்திற்கு மட்டுமே இரண்டரை லட்சம் ரூபாய் வரை வங்கியிலிருந்து எடுக்க முடியும் - பெற்றோர் அல்லது மணமக்களில் ஒருவருக்கு மட்டுமே பணம் வழங்கப்படும் - இரண்டரை லட்சம் ரூபாயை வங்கிக் கணக்கிலிருந்து எடுக்க தனி விண்ணப்பத்தை அளிக்க வேண்டும் - திருமண அழைப்பிதழ், முன்பண செலவு ரசீது ஆகியவற்றை, விண்ணப்பத்தில் இணைக்க வேண்டும் - வங்கிக் கணக்கு இல்லாதவர்கள், தங்களிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டுகளை கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.