ஐதராபாத் பிரியாணி, டெல்லி பட்டர் சிக்கன் சென்னையில் இருந்து ஆர்டர் செய்யலாம்; சொமோட்டோவின் புதிய சேவை!!
அந்தந்த மாநிலத்திற்கு என்று சிறப்பு உணவுகள் இருக்கின்றன. இனிமேல் மைசூர்பாகு வேண்டுமா, ஐதராபாத்தில் இருந்து ஒரிஜினல் பிரியாணி வேண்டுமா மறுநாளே உங்களது கைக்கு கிடக்கும். இதோ நாட்டின் எந்த மூலையில் இருந்தும் ஆர்டர் செய்யும் வசதியை சொமோட்டோ அறிமுகம் செய்துள்ளது.
இதுகுறித்து ஆன்லைன் உணவு விநியோக தளத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தீபிந்தர் கோயல் தனது ப்ளாக்கில் குறிப்பிட்டுள்ளார். இந்தத் திட்டத்தின் மூலம், வாடிக்கையாளர்கள் இந்தியாவில் இருந்து எங்கு வேண்டுமானாலும் ஆர்டர் செய்யலம். "கொல்கத்தாவில் இருந்து சுடச் சுட ரசகுல்லா, ஐதராபாத்தில் இருந்து பிரியாணி, பெங்களூரில் இருந்து மைசூர் பாக், லக்னோவில் இருந்து கெபாப், டெல்லியில் இருந்து பட்டர் சிக்கன் அல்லது ஜெய்ப்பூரில் இருந்து பியாஸ் கச்சோரி போன்ற பழம்பெரும் உணவுகளை சொமோட்டோவில் ஆர்டர் செய்யலாம். அடுத்த நாளே இவை உங்களது கைக்கு கிடைக்கும்.
நாடு முழுவதும் இருக்கும் உணவு டெலிவரி கூட்டாளிகள், உணவுத் தொழில்நுட்பத்தைப் பற்றிய ஆழமான புரிதல் மற்றும் எங்கள் வாடிக்கையாளர்கள் விருப்ப நுண்ணறிவு மூலம், இந்தியா முழுவதும் உள்ள புகழ்பெற்ற உணவுகள், அடுத்த நாளே வாடிக்கையாளர்களின் கைக்கு கிடைக்கும் வகையில் திட்டமிட்டுள்ளோம்.
இந்த "சிறப்பு உணவுகளை" Zomato App'' 'Intercity Legends' மூலம் ஆர்டர் செய்யலாம். இந்த உணவுகள் உடனடியாக விமானம் மூலம் அனுப்பப்படும்'' என்று கோயல் பதிவிட்டுள்ளார்.
மேலும் அவரது பதிவல், "உணவகத்தில் உணவுகள் புதிதாக தயாரிக்கப்பட்டு, மீண்டும் பயன்படுத்தக்கூடிய மற்றும் சேதமடையாத டப்பாக்களில் பார்சல் செய்யப்படும். உணவுகள் கொண்டு வரும்போது, குளிர்பாசன வசதியுடன் கொண்டு வரப்படும். ஆனால், ஃபிரீசரில் வைக்கப்படாது. உணவை உறைய வைக்காமல், கெடாமல் இருப்பதற்காக எந்தப் பொருட்களும் சேர்க்கப்படாது.
தற்போது, நிறுவனம் "டெல்லி குருகிராம் மற்றும் தெற்கு டெல்லியின் சில பகுதிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்காக இதை சோதனை அடிப்படையில் செய்து வருகிறது. இன்னும் சில வாரங்களில் நாட்டின் மற்ற நகரங்களுக்கும் இந்த சேவை விரிவுபடுத்தப்படும்" என்று கோயல் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது 7 முதல் 10 கி. மீட்டர் சரகத்திற்குள்ளான ஆர்டர்களை மட்டுமே சொமோட்டோ எடுத்து வருகிறது. இன்றும் பெரிய மற்றும் சிறு நகரங்களில் மட்டுமே இந்த சேவையை கொண்டு இருக்கும் சொமோட்டோ, இந்தியா முழுவதும் விரிவடைய இருக்கிறது.