உத்திர பிரதேச மருத்துவமனையில் குழந்தைகள் இறப்புக்கு ஆக்ஸிஜன் தட்டுப்பாடு காரணமில்லை என்றும் குழந்தைகளுக்கு ஏற்பட்ட மூளை பிறழ்ச்சியே காரணம் என்றும் அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் புதிய விளக்கம் அளித்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் மருத்து கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் சப்ளை நிறுத்தப்பட்டதால் 62  குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் தேசிய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஆக்ஸிஜன் சப்ளை செய்யும் நிறுவனத்துக்கு உத்தரபிரதேச அரசு 67 லட்சம் ரூபாய் பாக்கி வைத்தால் அந்நிறுவனம் ஆக்ஸிஜன் தருவதை நிறுத்திக் கொண்டது.

இதையடுத்து ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் கடந்த 5 நாட்களில் 62 குழந்திகள் உயிரிழந்துள்ளனர். இது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பதவி விலக வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இது குறித்து லக்னோவில் செய்தியாளர் சந்திப்பில் முதலமைச்சர் ஆதித்யநாத் விளக்கமளித்தார். குழந்தைகள் இறப்பு விவகாரத்தை தலைமைச் செயலாளர் தலைமையிலான கமிட்டி விசாரிக்கும் என்றும் அவர் உறுதியளித்தார். 

மேலும் , இவ்விவகாரம் குறித்து நீதித்துறை அளிக்கும் விசாரணை அறிக்கை அடிப்படையில் தவறிழைத்தோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆதித்யநாத் தெரிவித்தார்.

கடந்த 9 ஆம் தேதி கோரக்பூர் மருத்துவக் கல்லூரி முதல்வரை தான் சந்தித்து பேசியதாகவும், அப்போது ஆக்ஸிஜன் தட்டுப்பாடு குறித்து எந்தத் தகவலும் தன் கவனத்திற்கு கொண்டு வரப்படவில்லை என்றும் யோகி தெரிவித்தார்.

ஆக்ஸிஜன் விநியோகஸ்தருக்குரிய தொகையை கடந்த 5 ஆம் தேதியே அரசு கொடுத்துவிட்டதாக கூறிய முதலமைச்சர் , இதில் அரசின் மீது தவறா அல்லது ஆக்ஸிஜன் நிறுவனத்திற்கு உரிய நேரத்தில் தொகையை தராத கல்லூரி முதல்வர் மீது தவறா என்றும் கேள்வி எழுப்பினார்.

அதே நேரத்தில் குழந்தைகள் இறப்புக்கு ஆக்ஸிஜன் தட்டுப்பாடு மட்டும் காரணமில்லை என்றும் குழந்தைகளுக்கு ஏற்பட்ட மூளை பிறழ்ச்சி நோயும் காரணம் என்றும்  யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.