Yogi Aditya put in check for VIP culture
உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆட்சியை பிடித்த நாளில் இருந்து பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார்.
இதையொட்டி கிராப்புற வளர்ச்சி கூட்டம் லக்னோவில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் தலைமை வகித்து பேசிய முதல்வர் யோகி, “ தனது ஆட்சியில் உள்ள உத்தரபிரதேச மாநிலத்தில் அனைத்து மாவட்டங்களிலும் தண்ணீர் வசதி செய்துதரப்படும்.
நூறு நாள் வேலை திட்டத்தில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு ஆதார் அட்டை மூலம் ஊதியம் வழங்கப்படும். இதனால், முறைகேடுகள் நடப்பதை தடுக்கலாம்.
அரசு நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியர்கள், சரியான நேரத்துக்கு அலுவலகம் வருவதில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக உள்ளது. இதை சரிசெய்யும் விதமாக அனைத்து அரசு அலுவலங்களிலும் பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறை செயல்படுத்தப்படும்.
இதனால், சரியான நேரத்துக்கு அரசு ஊழியர்கள் வருவார்கள். அலுவலக நேரம் முடியும் வரை தங்களது வேலைகளை ஒழுங்காக செய்துவிட்டு செல்வார்கள். இதில் முறைகேடு நடந்தால், அதற்கான உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
உத்தரபிரதேசத்தில் உள்ள விஐபிகளுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு வசதிகள் நீக்கப்படும். இதன் தொடர்ச்சியாக 105 அரசியல்வாதிகளுக்கு அளிக்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பை நீக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னாள் முதல்வர்கள் அகிலேஷ் யாதவ், முலாயம் சிங், மாயாவதி ஆகியோருக்கு அளிக்கப்பட்டிருந்த பாதுகாப்பில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
