முதல்வர் எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு விரைவில் கவிழ்வது உறுதி என முன்னாள் முதல்வர் சித்தராமையா கூறியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ்- மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அரசு கவிழ்ந்ததை தொடர்ந்து, பாஜக ஆட்சிக்கு வந்தது. 5-வது முறையாக முதல்வராக எடியூரப்பா கடந்த மாதம் பதவி ஏற்றக்கொண்டார். இதனையடுத்து, 20-ம் தேதி 17 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்றுக்கொண்டனர். இதில் 3 பேருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் அமைச்சர் பதவி கிடைக்காத எம்.எல்.ஏ.க்கள், எதிர்பார்த்த இலாகா கிடைக்காத அமைச்சர்கள், துணை முதல்வர் பதவி கிடைக்காத மூத்த அமைச்சர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். துணை முதல்வர் பதவி கிடைக்காததால் அமைச்சர் ஸ்ரீராமுலுவின் ஆதரவாளர்கள் வட கர்நாடகத்தில் தீவிர போராட்டம் நடத்தினர். இது எடியூரப்பா அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில், இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சித்தராமையா கர்நாடகத்தில் தற்போது அமைந்துள்ள பாஜக அரசு, ஆபரேஷன் தாமரையால் உருவான சட்டத்துக்கு புறம்பான குழந்தையாகும். மஜத, காங்கிரஸ் எம்எல்ஏக்களை சட்ட விரோதமாக பாஜகவுக்கு இழுத்து, முதல்வர் எடியூரப்பா தலைமையில் அரசை அமைத்திருக்கிறார்கள். 

கடந்த ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அரசு அமைவதற்கு மக்கள் தீர்ப்பளிக்கவில்லை. முதல்வர் எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு கவிழ்வது தவிர்க்க முடியாததாகும். எனவே, எந்த நேரத்திலும் எடியூரப்பா அரசு கவிழ்ந்து, சட்டப்பேரவைக்கு இடைக்கால தேர்தல் நடைபெறலாம். வாரத்தில் 3 நாள்கள் முதல்வர் எடியூரப்பா டெல்லிக்கு சென்றுவருகிறார். 

பாஜக முன்னாள் தேசியத் தலைவர் அமித்ஷாவின் ஒப்புதல் இல்லாமல் எந்த முடிவையும் எடுக்க இயலாத பரிதாப நிலையில் முதல்வர் எடியூரப்பா உள்ளார். சட்டப்பேரவைக்கு இடைக்கால பொதுத்தேர்தல் வந்தால், எங்களுக்கும் பாஜகவுக்கும் இடையேதான் மோதல். மஜதவுக்கும், எங்களுக்கும் மோதல் இல்லை. மதச்சார்பற்ற கட்சிகளான காங்கிரஸும், மஜதவும் எப்படி மோதிக்கொள்ள முடியும். மஜத தலைவர்கள் மீது எனக்கு எவ்வித வருத்தமும், காழ்ப்புணர்வும் இல்லை என முன்னாள் முதல்வர் சித்தராமையா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.