உலக தடகளத் தலைவர் செபாஸ்டியன் கோ, பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்த அனுபவங்களை ஏசியாநெட் நியூஸ் குழுமத்தின் நிர்வாகத் தலைவர் ராஜேஷ் கல்ராவுடனான சிறப்புப் பேட்டியில் பகிர்ந்து கொண்டார்.

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு நடத்தியது குறித்த அனுபவங்களை உலக தடகளத் தலைவர் செபாஸ்டியன் கோ பகிர்ந்து கொண்டார். நாட்டின் சுகாதாரத் துறையிலும், குடிமக்களின் குணநலன்களை வளர்ப்பதிலும் விளையாட்டுத் துறை வகிக்கும் பங்கு குறித்து பிரதமருடனான சந்திப்பில் பேசியதாக அவர் கூறினார். ஏஷியாநெட் நியூஸ் குழுமத்தின் நிர்வாகத் தலைவர் ராஜேஷ் கல்ராவுடனான சிறப்புப் பேட்டியில், பிரதமருடனான சந்திப்பின் விவரங்களை அவர் பகிர்ந்து கொண்டார்.

பாராளுமன்றின் குளிர்காலக் கூட்டத்தொடரின் தொடக்கத்தில் பிரதமரைச் சந்தித்ததாக செபாஸ்டியன் கோ கூறினார். ஒரு பெரிய நிறுவனக் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டியிருந்தும், தன்னுடனான சந்திப்புக்கு நரேந்திர மோடி நேரம் ஒதுக்கினார். ஒரு பாராளுமன்ற உறுப்பினராகவும், குறுகிய காலம் அமைச்சராகவும் இருந்ததால், தலைவர்களின் ஒரு நாள் பணிச்சுமை எப்படி இருக்கும் என்பது தனக்குத் தெரியும் என்றும் அவர் தெரிவித்தார்.

இவ்வளவு பணிச்சுமைக்கு இடையிலும் பிரதமருடன் சிறப்பான விவாதங்கள் நடைபெற்றதாக செபாஸ்டியன் கோ கூறினார். பல உலகத் தலைவர்களைச் சந்தித்திருக்கிறேன். ஆனால், சமூகத்தில் விளையாட்டின் முக்கியத்துவம் குறித்து ஒரு தலைவருடன் இவ்வளவு சிறப்பான விவாதம் நடந்தது மிகவும் அரிது என்றும் அவர் கூறினார்.

நாட்டின் குணநலன் வளர்ச்சியில் விளையாட்டுக்கு இருக்கும் பங்கு குறித்து நரேந்திர மோடி பலமுறை பேசியிருப்பதாக செபாஸ்டியன் கோ சுட்டிக்காட்டினார். ஒரு பிரதமர் இவ்வாறு சிந்திப்பது நாட்டுக்கு மிகவும் நல்லது என்றும், ஒரு அரசியல்வாதி, ஒரு தலைவர் இவ்வளவு காலமாக இதுகுறித்துப் பேசுவதை கேட்பது மகிழ்ச்சியளிக்கிறது என்றும் அவர் கூறினார்.

டெல்லிக்கு வந்த செபாஸ்டியன் கோ, பிரதமர் நரேந்திர மோடியைத் தவிர, விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூரையும் சந்தித்தார். 1980-84 காலகட்டத்தில் ஒலிம்பிக்கில் இரண்டு முறை 1,500 மீட்டர் ஓட்டத்தில் சாம்பியனானவர் செபாஸ்டியன் கோ. சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் அடுத்த தலைவராக 68 வயதான செபாஸ்டியன் கோவே தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலக அதெலடிக் தலைவர் Sebastian Coe-விடம் சிறப்பு நேர் காணல்!! | Asianet News Tamil