அசாம் மாநிலத்தில் ஐக்கிய ஜனநாயக முன்னணி கட்சி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் நிஜாம் உத்தின் சவுத்திரி. இவர் மீதுதான் அசாம் மாநிலம் ஹைலகண்டி போலீஸ் நிலையத்தில் பெண் ஒருவர் கண்ணீர் மல்க புகார் ஒன்றை கூறியுள்ளார்.

அதில் தனது கணவர் துணையுடன் எம்.எல்.ஏ நிஜாம் உத்தின் சவுத்திரி தன்னை கடந்த மே மாதம் இரண்டு முறை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவித்துள்ளார். மே 19 ஆம் தேதியும் மே 23ஆம் தேதியும் எம்எல்ஏ தன்னை பாலியல் பலாத்காரம் செய்தாக கூறியுள்ளார்.

மேலும் எம்எல்ஏ தன்னை கவுகாத்திக்கு கடத்திச் செல்ல எம்.எல்.ஏ. முயன்றதாகவும், தான் தற்கொலைக்கு முயன்றதால் அந்த முயற்சியை எம்எல்ஏ நிஜாம் உத்தின் சவுத்திரி கைவிட்டதாகவும் கூறியுள்ளார். தனக்கு நீதி வழங்க வேண்டும் அல்லது நான் தற்கொலை செய்து கொள்வேன் என்றும் பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக ஹைலகண்டி போலீசார் எம்.எல்.ஏ நிஜாம் உத்தின் சவுத்திரி மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால் இந்த குற்றச்சாட்டை எம்.எல்.ஏ. நிஜாம்உத்தின் சவுத்திரி மறுத்துள்ளார்.

இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்றும் தனக்கு எதிரான சதி என்றும் கூறியுள்ளார். மேலும் குடும்ப பிரச்சனை காரணமாக அந்த பெண்தான் அவரது கணவருடன் தன்னை சந்தித்ததாகவும் அவருடன் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்றும் நிஜாம் உத்தின் சவுத்திரி தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே உன்னாவ் சிறுமி பலாத்கார வழக்கில் எம்எல்ஏ ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது திருமணமான பெண் ஒருவர் மேலும் ஒரு எம்எல்ஏ மீது பாலியல் புகார் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.