நாடுமுழுவதும் இன்று தொடக்கம்

மும்பை, அக். 24-

முதலீட்டாளர்களுக்கு தீபாவளித் தள்ளுபடியுடன் 6-ம் கட்ட தங்க விற்பனைத் திட்டம் நாடுமுழுவதும் இன்று(அக்.24ந்தேதி) தொடங்குகிறது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

தங்கப் பத்திரம்

நாட்டின் தங்கம் இறக்குமதியை குறைப்பதற்காக, தங்கம் மதிப்பில் உள்ள பத்திரத்தை வாங்கும் திட்டத்தை மத்திய அரசு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கொண்டு வந்தது. தங்கப் பத்திரத்துக்கு ஆண்டுக்கு 2.75 சதவீத வட்டியும், 8 ஆண்டு முதிர்வு காலத்துக்குபின், பத்திரத்தை கொடுத்து, அன்றைய விலை நிலவரப்படி, தங்கமாகவோ, பணமாகவோ பெறலாம்.

500 கிராம்

இந்த பத்திரங்களுக்கு தங்கத்தின் மதிப்புடன் வட்டியும் சேர்த்து வழங்கப்படும். ஒரு நபர் ஒரு நிதி ஆண்டில் 500 கிராம் தங்கப் பத்திரங்களுக்கு மேல் முதலீடு செய்ய முடியாது குறைந்த பட்சமாக, 2 கிராம், அதிகபட்சமாக, 500 கிராமுக்கு பத்திரம் வாங்கலாம்.

5-ம் கட்டம்

ஏற்கனவே 5 கட்டமாக தங்கப்பத்திரங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடைசியாக மேற்கொள்ளப்பட்ட 5-ம் கட்ட தங்கப்பத்திர விற்பனையில், 2 லட்சம் விண்ணப்பங்கள் மூலம், 2,370 கிலோ தங்கத்தின் மதிப்புக்கு சமமான பத்திரங்கள் ரூ. 820 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது.

செப்டம்பர் 1 முதல் 9-ந்தேதி வரை நடந்த இந்த விற்பனையில் எப்போதும் இல்லாத வகையில் கிராம் ஒன்றுக்கு 3 ஆயிரத்து 150 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டது. இதுதான் கடந்த 5 கட்டத்தில் மிக அதிகமாகும்.

தள்ளுபடி

இந்நிலையில், 6-ம் கட்ட தங்கப்பத்திர விற்பனை இன்று தொடங்குகிறது. இது நவம்பர் 6-ந்தேதி வரை நடக்கிறது. இந்த முறை தீபாவளிப் பண்டிகையையொட்டி அறிவிக்கப்படுவதால், முதலீட்டாளர்களுக்கு தள்ளுபடியை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதன்படி, கிராம் ஒன்றுக்கு ரூ. 50 தள்ளுபடி தரப்படுகிறது.

அதாவது, 999 சதவீதம் சுத்த தங்கத்தின் மதிப்பில் கணக்கிடப்படும் தங்கப்பத்திரத்தின் மதிப்பு கிராம் ஒன்று, ரூ.3,007-ல் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த முறை முதலீட்டாளர்களுக்கு தீபாவளித்தள்ளுபடியாக ரூ. 50 குறைக்கப்பட்டு, ரூ. 2,957 ரூபாயில் கிராம் ஒன்று விற்பனை செய்யப்பட உள்ளது என ரிசர்வ் வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னடைவு

அதேசமயம், இந்த 6-ம் கட்ட தங்கப்பத்திர திட்டத்தில் முதலீட்டாளர்களுக்கு ஒரு பின்னடைவும் வந்துள்ளது. இதற்கு முன் இருந்த 5 கட்ட விற்பனைத் திட்டத்தில் முதலீட்டாளர்கள் வாங்கும் தங்கப்பத்திரத்துக்கு 2.75 சதவீதம் வட்டி வழங்கப்பட்டது. ஆனால், இந்த முறை ரிசர்வ் வங்கியின் வட்டிக்குறைப்பை காரணம் காட்டி, 2.50 சதவீதமாக வட்டி குறைக்கப்பட்டுள்ளது. இது எந்த அளவுக்கு முதலீட்டாளர்களை கவர்ந்திழுக்கும் என்பது இந்த திட்டத்தின் முடிவில் தான் தெரியும்.