ஒவ்வொரு இந்திய குடிமகனும் எல்லையில் பணிபுரியும் ராணுவ வீரர்களுக்கு வாழ்த்துக்களை ெதரிவித்து தீபாவளி பண்டிகையை கொண்டாடும்படி, பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதற்காக, ‘எனது அரசாங்கம் (மை கவ்)’ என்ற சமூக வலைத்தளம் மூலம் நரேந்திர மோடி செயலி (ஆப்) வழியாக ‘‘#Sandesh2Soldiers’’ என்ற பிரசார இயக்கத்தை பிரதமர் மோடி தொடங்கி உள்ளார். இதன் மூலம் ராணுவ வீரர்களுக்கு நாட்டு மக்கள் தீபாவளி வாழ்த்து அனுப்ப வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக, தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். அதில், ‘நமது வீரர்களுக்கு எனது தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்து விட்டேன். நமது நாட்டை பாதுகாக்கும் வீரர்களின் தீரத்தை நீங்களும் நினைவுகூர்ந்து ராணுவ வீரர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களை அனுப்பி வையுங்கள்.

125 கோடி மக்களும் அவர்களை வாழ்த்தினால், நமது வீரர்களின் பலம் 125 கோடி மடங்கு அதிகரிக்கும்’ என குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல் அகில இந்திய வானொலி நிலையமும் தபால் கார்டு வழியாக எல்லைப்பகுதிகளை காக்கும் வீரர்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவிக்கும் வசதியை ஏற்படுத்தி உள்ளது. இது தவிர, இந்த வேண்டுகோளை வலியுறுத்தி ஒரு வீடியோவையும் அவர் வெளியிட்டுள்ளார்.

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அந்த வீடியோ, வெளியான சில மணி நேரத்தில் பேஸ்-புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் டிரெண்டாக மாறி உள்ளது. பலரும் அந்த வீடியோக்கு விருப்பம் (லைக்) தெரிவித்து, பகிர்ந்து (ஷேர்) செய்து உள்ளனர்.

பிரதமர் மோடி, கடந்த 2 தீபாவளிகளையும் ராணுவ வீரர்களுடன் இணைந்து கொண்டாடினார் என்பது நினைவுக் கூரத்தக்கது.