மத்திய பிரதேசத்தில் ஆட்சியமைக்க பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே நிலவி வந்த கடும் போட்டி தற்போது முடிவுக்கு வந்துள்ளது. பாஜகவின் திட்டத்தை மயாவாதி தவிடுபொடியாக்கியுள்ளார். இந்நிலையில் ஆட்சியமைக்க காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் ஆனந்திபென் பட்டேல் அழைப்பு விடுத்துள்ளார். இதனையடுத்து நண்பகல் 12 மணிக்கு காங்கிரஸ் தலைவர்கள் ஆளுநரை சந்திக்கின்றனர். பெரும்பான்மைக்கு 116 இடங்கள் தேவைப்படும் நிலையில், 114 இடங்களில் காங்கிரஸ் வெற்றிபெற்றுள்ளது. பகுஜன் சமாஜ் எம்எல்ஏக்கள் 2 பேர் ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சி அமைக்கிறது.

 

 மத்தியப் பிரதேசத்தில் கடந்த 15 ஆண்டுகளாக பாஜக ஆட்சி நடைபெற்று வந்தது. ஆனால் சமீபத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களை கைப்பற்றியுள்ளது. மொத்தம் 230 தொகுதிகள் உள்ள நிலையில் ஆட்சியமைக்க 116 இடங்கள் தேவை. ஆனால் 114 இடங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. 109 இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. சமாஜ் வாதி கட்சி ஒரு இடத்திலும், சுயேச்சைகள் 4 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர். 

இதனால் காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. அதேநேரத்தில் 109 இடங்களில் வென்றுள்ள பாரதிய ஜனதா கட்சியும் ஆட்சி அமைக்க தீவிரம் காட்டி வருகிறது.

 

இந்நிலையில் பகுஜன் சமாஜ் கட்சி காங்கிரசுக்கு ஆதரவு தெரிவிப்பதாக மயாவாதி அறிவித்துள்ளார். பாஜக மீதான அதிருப்தியின் காரணமாகவே மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்துள்ளனர். பாஜக பட்டியல் இன மக்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது என மயாவாதி தெரிவித்தார். தேவைப்பட்டால் ராஜஸ்தான் மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சிக்கு பகுஜன் சமாஜ் ஆதரவு தரும் என கூறியுள்ளார். 

முன்னதாக மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் கமல்நாத், அம்மாநில ஆளுநர் ஆனந்திபென் படேலிடம் ஆட்சியமைக்க உரிமை கோரி கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் ஆனந்திபென் பட்டேல் அழைப்பு விடுத்துள்ளார். இதனையடுத்து நண்பகல் 12 மணிக்கு காங்கிரஸ் தலைவர்கள் ஆளுநரை சந்திக்கின்றனர்.