காங்கிரஸ் வேட்பாளர் அகமது படேல் வெற்றி பெறுவாரா? என எதிர்பார்க்கப்பட்ட பரபரப்பான குஜராத் மாநிலங்களவை தேர்தலில் எதிர்பாராத திருப்பமாக ஓட்டு எண்ணிக்கையில் தாமதம் ஏற்பட்டது.

குஜராத்தில் இருந்து நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் மூன்று பேரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலில் பா.ஜனதா சார்பில் கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியுடன் பல்வந்த்சிங் ராஜ்புத் என்பவரும் போட்டியிட்டார்.

காங்கிரஸ் சார்பில் சோனியா காந்தியின் அரசியல் செயலாளர் அகமது படேல் போட்டியிட்டார். பா.ஜனதாவைப் பொருத்தவரை, அமித்ஷாவும், ஸ்மிருதி இரானியும் வெற்றி பெறுவதில் எந்த பிரச்சினையும் இல்லை.

இருப்பினும் அகமது படேலை தோற்கடிப்பதற்காக 3-வது வேட்பாளராக பல்வந்த்சிங் ராஜ்புத் நிறுத்தப்பட்டார். இவர் காங்கிரசில் இருந்து பா.ஜனதாவுக்கு தாவிய எம்.எல்.ஏ. ஆவார்.

மேலும் சில எம்.எல்.ஏ.க்கள் கட்சி தாவியதால், 44 காங்கிரஸ் உறுப்பினர்கள் பாதுகாப்பாக பெங்களூருக்கு அழைத்துச் செல்லப்பட்டு இருந்தனர்.

நேற்று அவர்கள் குஜராத் திரும்பி காந்தி நகர் சட்ட மன்ற வளாகத்தில் நடந்த தேர்தலில் ஓட்டு போட்டனர். காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்தல் நடைபெற்றது.

6 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. அப்போது காங்கிரஸ் தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. இரு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களான ராகவ்ஜி படேல் மற்றும் போலா கோஸ்ஹில் இருவரும் தங்கள் ஓட்டுச் சீட்டுகளை காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா ஆகிய இரு முகவர்களிடமும் காட்டியதாக புகார் கூறப்பட்டது.

இந்த காரணத்தால் அவர்களுடைய ஓட்டுகளை ெசல்லாது என்று அறிவிக்கும்படி காங்கிரஸ் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

இது குறித்து காங்கிரசின் மூத்த தலைவரான சக்திசிங் கோஹில் கூறும்போது, ‘‘அவர்கள் இருவரும் பா.ஜனதாவுக்கு ஓட்டளித்து இருந்தனர். வாக்குச்சீட்டை அவர்கள் என்னிடம் காட்டியபின்னர் பா.ஜனதா தரப்புக்கும் காண்பித்தனர். இதற்கான வீடியோ ஆதாரம் உள்ளது’’ என்று தெரிவித்தார்.

தேர்தல் அதிகாரி டி.எம்.படேலுக்கு நிர்பந்தம் உள்ளது. வீடியோவின் அதிகாரபூர்வ நகல் ஒன்றை நாங்கள் பெற்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

காங்கிரஸ் எழுப்பிய ஆட்சேபனை மீது நடவடிக்கை எடுக்கும்வரை ஓட்டு எண்ணிக்கையை தொடங்க முடியாது என்றும் அவர் கூறினார். இதன் காரணமாக ஓட்டு எண்ணிக்கையில் தாமதம் ஏற்பட்டது.