காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உத்தரப்பிரதேசத்தில் உள்ள அமேதி தொகுதியில் 4-வது முறையாகப் போட்டியிடுகிறார். ஏற்கனவே 3 முறை அமேதியில் வெற்றி பெற்ற ராகுல், இந்த முறை இரண்டு தொகுதியில் போட்டியிட முடிவு செய்தார். அதனை அறிந்த பல்வேறு மாநில கமிட்டி சார்பில் ராகுல் காந்தி போட்டியிட அழைப்புகள் விடுக்கப்பட்டன. ஏற்கனவே வட இந்தியாவில் ராகுல் காந்தி போட்டியிடும் நிலையில் தென்னிந்தியாவில் போட்டியிட ராகுல் விரும்பினார்.


ராகுல் காந்திக்கு ஏற்ற தொகுதி பற்றி தென்னிந்தியாவில் காங்கிரஸார் தீவிர ஆலோசனை செய்தனர். முதலில் கர்நாடகாவில் பாதுகாப்பான தொகுதிகள் பற்றி ஆலோசிக்கப்பட்டது. ஆனால், கர்நாடகாவில் பாஜக கடும் போட்டியைத் தரும் என்பதால், கேரளாவில் தொகுதி தேடப்பட்டன. தீவிர யோசனைக்கு பிறகு  வயநாடு தொகுதி சரியாக இருக்கும் என்று காங்கிரஸ் சார்பில் தீர்மானிக்கப்பட்டது.
வயநாடு என்பது 2009-ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட புதிய தொகுதி. மலப்புரம், கோழிகோடு, வயநாடு பகுதிகளில் உள்ள தொகுதிகளைச் சேர்த்து இத்தொகுதி உருவாக்கப்பட்டது. மலைவாசஸ்தலங்கள் அடங்கிய தொகுதி. இதில் முக்கியமான விஷயம், கேரளா, தமிழ்நாடு, கர்நாடகம் என மூன்று மாநிலங்களின் எல்லையில் வயநாடு தொகுதி உள்ளது. கர்நாடகாவிலும் கேரளாவிலும் காங்கிரஸ் கட்சிக்கு செல்வாக்கு இருப்பதால் ராகுல் காந்தி இத்தொகுதியைத் தேர்ந்தெடுத்ததாகக் கூறப்படுகிறது. தமிழகத்தில் நீலகிரியை தொகுதியை ஒட்டி வயநாடு வருகிறது. 
கடந்த 2009, 2014-ம் ஆண்டில் நடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி இத்தொகுதியைக் கைப்பற்றியது. இரண்டு முறையும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஷானவாஸ் போட்டியிட்டு வெற்றி பெற்றார். காங்கிரஸ் கட்சிக்கு சாதகமான தொகுதியாக வயநாடு தொகுதி இருந்துவருவதால் இத்தொகுதியை ராகுல் காந்தி விரும்பி தேர்ந்தெடுத்தார் என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடைசியாக கடந்த 1999-ம் ஆண்டில் அன்றைய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தென்னிந்தியாவில் கர்நாடக மாநிலம் பெல்லாரியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். சோனியாவை எதிர்த்து பாஜக மூத்த தலைவர் சுஷ்மா சுவ்ராஜ் பெல்லாரியில் களமிறங்கினார். 20 ஆண்டுகளுக்கு பிறகு தேசிய கட்சியின் தலைவர் ஒருவர் தென்னிந்தியாவில் போட்டியிட இருப்பது குறிப்பிடத்தக்கது.