தேர்தல் களத்தை சூடாக்கியிருப்பது பிரியங்காவின் அரசியல் பிரவேசம்தான். பிரியங்காவின் வருகை காங்கிரஸ் கட்சிக்கு என்ன பலன் கிடைக்கும் என்பதைப் பற்றி பல கட்சிகளும் கணக்குப்போட்டுவருகின்றன. இந்நிலையில் பிரியங்காவின் அரசியல் பிரவேசம் பற்றியும் மாறுபட்ட கருத்துகள் வரத் தொடங்கியிருக்கின்றன. 

அரசியலில் இறங்க ஆர்வம் காட்டாத பிரியங்கா,  ராகுல், சோனியா ஆகியோர் போட்டியிடும் தொகுதிகளில் மட்டுமே பிரசாரம் செய்து வந்தார். ஆனால், திடீரென பிரியங்கா அரசியலில் இறங்க உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியை பகுஜன் சமாஜ் கட்சியும் சமாஜ்வாடி கட்சியும் ஒதுக்கியது மட்டுமே காரணமல்ல. மேலும் சில காரணங்கள் இருப்பதாக டெல்லி வட்டாரங்களில் பேசப்படுகிறது. வரும் நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ் கட்சியின் ஊழல்களை முன்வைத்து பேச திட்டமிட்டிருக்கிறது. குறிப்பாக சோனியா - ராகுல் மீது நிலுவையில் உள்ள 'நேஷனல் ஹெரால்ட்' தொடர்பான வழக்கும் ஒரு காரணம்.

இததொடர்பாக, வருமான வரித்துறை மற்றும் அமலாக்கப் பிரிவு விசாரணையிலும் இத்தலைவர்கள் சிக்கியுள்ளனர். இதேபோல பிரியங்காவின் கணவர் ராபர்ட் வாத்ரா மீதும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. பல்வேறு வழக்குகளில் குடும்பமே சிக்கியிருக்கிறார்கள். இந்த வழக்குகளை தேர்தல் நேரத்தில் பிரசாரத்துக்கு பாஜக பயன்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

சோனியா குடும்பத்தில் பிரியங்கா மட்டும் எந்த வழக்கிலும் சம்பந்தப்படாமல் இருக்கிறார். பாஜக தங்களுக்கு எதிராகப் பிரசாரம் செய்வதைத் தடுக்கும் வகையில், அஸ்திரமாகவே பிரியங்காவை அரசியலில் இறக்க சோனியா முடிவெடுத்ததாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உண்மையில் பிரியங்கா அரசியலுக்கு வருவதில் சோனியாவிற்கு விருப்பமில்லைதானாம். ஆனால், பாஜகவின் பிரசாரத்தைத் தடுக்கவும், மோடியின் ஆதிக்கத்தை தடுத்து நிறுத்தவுமே பிரியங்கா அரசியலுக்கு வருவதை சோனியா விரும்பினார் என்றும் டெல்லி காங்கிரஸில் பேசப்படுகிறது.