போஃபர்ஸ் பீரங்கி ஊழல் வழக்கு விவகாரத்தில், காணாமல் போன கோப்புகளைத் கண்டுபிடித்துத் தரும்படி, பாதுகாப்பு அமைச்சகத்துக்கு நாடாளுமன்ற பொது கணக்குக் குழு உத்தரவிட்டுள்ளது. 

P.A.C. எனப்படும் நாடாளுமன்ற பொது கணக்கு குழுவின் கூட்டம், டெல்லியில் நடைபெற்றது.

இதில், போஃபர்ஸ் பீரங்கி ஊழல் விவகாரம் தொடர்பாக, சி.ஏ.ஜியால் அளிக்கப்பட்டு, நீண்டநாட்களாக நிலுவையில் இருக்கும் அறிக்கை குறித்து, பிஜு ஜனதா தளம் கட்சி எம்.பி. பர்த்ரு ஹரி மஹ்தாப் தலைமையிலான 6 உறுப்பினர்கள் கொண்ட பொது கணக்குக் குழு, ஆய்வு செய்தது.

அப்போது, சி.ஏ.ஜி. அறிக்கையில் இடம்பெற்றிருந்த சில குறிப்புகள் அழிக்கப்பட்டு விட்டதாகவும், அதுதொடர்பான கோப்புகள் காணாமல் போய்விட்டதாகவும், பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, காணாமல் போனதாக கூறப்படும் கோப்புகளையும், ஒப்பந்தம் தொடர்பான குறிப்புகளையும், பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் கண்டுபிடித்து தர வேண்டும் என நாடாளுமன்ற பொதுக்கணக்கு குழு உத்தரவிட்டுள்ளது.