இதயங்கள் சந்தித்த பொழுது தழுவிக் கொண்டன என ரஜினிகாந்த் உடனான சந்திப்பு குறித்து சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்
நடிகர் ரஜினிகாந்த்தின் ‘ஜெயிலர்’ படம் வெளியாகி ஒருபுறம் வசூலை குவித்து வருவதற்கிடையே, அவர் 4 ஆண்டுகளுக்குப் பிறகு ஆன்மிக பயணமாக அண்மையில் இமயமலை சென்றார். இமயமலையில் இருந்து திரும்பியுள்ள அவர், வரும் வழியில் வட மாநிலங்களில் உள்ள ஆன்மீக தலங்களுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்து வருகிறார்.
அந்தவகையில், உத்தரப்பிரதேச மாநிலம் வந்துள்ள ரஜினிகாந்த், அம்மாநில துணை முதல்வர் கேசவ் பிரசாத்துடன் இணைந்து ஜெயிலர் படத்தை பார்த்தார். இதையடுத்து, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இல்லத்திற்கு சென்ற ரஜினிகாந்த், அவரது காலை தொட்டு வணங்கினார். யோகி ஆதித்யநாத் காலை தொட்டு ரஜினிகாந்த் வணங்கும் வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால், யோகி ஆதித்யநாத் ஏற்கனவே மடாதிபதியாக இருந்தவர். யோகி ஒரு துறவி என்பதால், அவரது காலில் ரஜினிகாந்த் விழுந்தது தவறில்லை எனவும், ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்டிருக்கும் சாமியார்கள் விஷயத்தில் ரஜினி வயது வித்தியாசம் பார்ப்பது இல்லை எனவும் அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். முதல்வராக இல்லாமல், துறவி என்பதாலேயே அவரது காலில் விழுந்து ரஜினிகாந்த் வணங்கியதாக கூறப்படும் நிலையில், ரஜினியின் சுயமரியாதை குறித்து கேள்வி எழுப்பி அவரை பலரும் விமர்சிக்கின்றனர். துறவி என்றால் முற்றும் துறந்தவர் தானே, எதற்காக அதிகாரத்துக்கு ஆசைப்பட்டு யோகி முதல்வரானார் என்ற எதிர் கேள்விகளும் எழுப்பப்படுகின்றனர்.
யோகி ஆதித்யநாத் உடனான சந்திப்புக்கு பிறகு, உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவை ரஜினிகாந்த் சந்தித்தார். அப்போது இருவரும் ஒருவரையொருவர் கட்டியணைத்துக் கொண்டனர்.
இதுகுறித்து அகிலேஷ் யாதவ் தனது ட்விட்டர் பக்கத்தில், “இதயங்கள் சந்தித்த பொழுது தழுவிக் கொண்டன. மைசூரில் என்ஜினீயரிங் படிக்கும் போது, ரஜினிகாந்த் ஜியை திரையில் பார்த்த மகிழ்ச்சி இன்னும் அப்படியே இருக்கிறது. நாங்கள் 9 ஆண்டுகளுக்கு முன்பு நேரில் சந்தித்தோம், அன்றிலிருந்து நண்பர்களாக இருக்கிறோம்.” என்று பதிவிட்டுள்ளார்.
மதுரை அதிமுக மாநாடு சிறப்பு மலர் வெளியீடு; திமுக அரசுக்கு எதிராக 32 தீர்மானங்கள்!
