முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஒடிசாவின் வீலர் தீவுக்கு  ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தீவு என பெயரிடப்பட்டுள்ளது.

முன்னாள் குடியரசுத் தலைவர்  மற்றும் அணு விஞ்ஞானியான ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் 2வது நினைவு நாள் இன்று கடைப்பிடிக்கப்பட்டது.

அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஒடிசாவில் உள்ள வீலர் தீவுக்கு அவரது பெயரை சூட்டுவது என முடிவு செய்யப்பட்டது.  

இதற்கு முறைப்படி உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதல் பெறப்பட்டு ஒடிசா வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை நேற்று அரசிதழில் வெளியிட்டது.

அதன் நகல் ஒடிசா முதல் அமைச்சர் நவீன் பட்நாயக்கிடம் இன்று ஒப்படைக்கப்பட்டது.  

இது தொடர்பான நிகழ்ச்சியில் அப்துல் கலாமுக்கு அஞ்சலி செலுத்திய பின் பட்நாயக், பத்ரக் மாவட்டத்தில் உள்ள வீலர் தீவு மற்றும் பாலசோர் மாவட்டத்தில் உள்ள சந்திப்பூர் ஆகிய 2 ஏவுகணை சோதனை தளத்துடன் கலாமுக்கு உள்ள நெருங்கிய தொடர்பினை நினைவு கூர்ந்து பேசினார்.

நாட்டின் பாதுகாப்பிற்கான ஏவுகணைகளை உருவாக்குவதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக அதிக நேரத்தினை இந்த இரு இடங்களிலும் கலாம் செலவிட்டுள்ளார் என்றும் பட்நாயக் கூறினார்.

இதையடுத்து வீலர் தீவுக்கு  ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தீவு என முறைப்படி நவீன் பட்நாயக் பெயரிட்டார்.