Life Mission scam case: லைஃப்மிஷன் வழக்கில் வெட்ட வெளிச்சமான சிவசங்கர், ஸ்வப்னா சுரேஷ் உரையாடல்!!
எம் சிவசங்கர் மற்றும் ஸ்வப்னா சுரேஷ் இடையே நடந்த பல்வேறு வாட்ஸ்அப் உரையாடல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது 2019ஆம் ஆண்டு, செப்டம்பரில் நடந்த வாட்ஸ்அப் உரையாடல்.
லைஃப் மிஷன் திட்டத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள செஞ்சிலுவை சங்கம் உதவியை எவ்வாறு கொண்டு வருவது என்பது குறித்து சிவசங்கர் ஆலோசனை கூறுகிறார். செஞ்சிலுவை சங்கத்தின் கடிதத்தை அரசிடம் எவ்வாறு கொடுக்க வேண்டும் என்பதற்கான ஆலோசனையையும் சிவசங்கர் கொடுக்கிறார்.
துணைத் தூதரகத்தின் கடிதத்துடன் முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பவும் பரிந்துரைக்கப்பட்டது. சிவசங்கரும் ஸ்வப்னாவிடம் இரண்டு கடிதங்களை தயார் செய்து தன்னிடம் ஒப்படைக்க்குமாறு கூறுகிறார். தேவைப்பட்டால் முதலமைச்சரின் கூடுதல் தனிச் செயலாளராக இருந்த சி.எம்.ரவீந்திரனை அழைத்துப் பேசவும் ஸ்வபனாவுக்கு அறிவுறுத்துகிறார். முதல்வர் பினராய் விஜயனுக்கு நெருக்கமாக இருந்தவர் ரவீந்திரன் என்று கூறப்பட்டது.
இந்த வாட்ஸ்அப் உரையாடலை லைஃப் மிஷன் ஒப்பந்தத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் செஞ்சிலுவைச் சங்கத்தை ஈடுபடுத்த சிவசங்கரின் திட்டமிட்ட நடவடிக்கையாக அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ பார்க்கின்றன.
லைஃப் மிஷன் ஊழல் வழக்கு... கேரள முதல்வரின் முன்னாள் முதன்மைச் செயலாளர் சிவசங்கர் அதிரடி கைது
சிவசங்கர் எழுதியதாக வெளியாகி இருக்கும் தகவலில், ''கேரளாவில் 2018ல் ஏற்பட்ட வரலாறு காணாத இயற்கைப் பேரிடரில் கேரள மக்களின் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதம் மற்றும் இழப்புகளை செஞ்சிலுவைச் சங்கம் மதிப்பிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வு கணிசமாக முன்னேறியுள்ளது. அதே நேரத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் வீடுகள் இல்லாமல் மக்கள் உள்ளனர். இந்தச் சூழலில், இதுபோன்ற பகுதிகளில் வீட்டுத் தொகுதிகளை நேரடியாகக் கட்டுவதற்கு நாங்கள் விரும்புகிறோம்.
இதுபோன்ற குடியிருப்பு வளாகங்களில் போதுமான சுகாதார பராமரிப்பு, முதியவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பராமரிப்பு ஆகியவற்றை உறுதி செய்வதற்கான வசதிகளையும் நாங்கள் வழங்குகிறோம். மாநில அரசின் தேவை மற்றும் குறிப்பிட்ட கட்டிடத் திட்டங்களின்படி கட்டுமானம் மற்றும் செயல்படுத்துதல் எங்களால் ஒருங்கிணைக்கப்படும். இதை நிறைவேற்ற பொருத்தமான நிலம், குறிப்பிட்ட ஒரு நிறுவனத்தால் ஒருங்கிணைக்கப்பட்ட ஒப்புதல்கள் மற்றும் அனுமதிகள் உட்பட தேவையான வசதிகளை வழங்குவதற்கும் கோரப்பட்டுள்ளது. மேற்கூறிய வழிகளில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தமும் ஏற்படலாம்.
சிவசங்கர்:
துணைத் தூதரகம் இந்தக் கடிதத்தை ஏற்றுக் கொண்டு, திட்ட முன்மொழிவு விரைவில் வழங்கலாம். உரிய அறிவுறுத்தல்களை வழங்குமாறு கோரி முதலமைச்சருக்கு எழுதலாம்.
பின்னர் தொடர்ந்து அன்றே இந்த திட்டத்தை நிறைவேற்ற ஸ்வப்னாவை நீங்கள் அழைத்து பேசலாம் என்று ரவீந்திரனுக்கு சிவசங்கர் வாட்ஸ்அப்பில் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.
பின்னர், விமான நிலைய உதவிக்காக நெறிமுறை துறைக்கு கடிதம் எழுதியுள்ளீர்களா? என்று ஸ்வப்னாவிடம் சிவசங்கர் கேட்கிறார். இதற்கு , ''ஆமாம்'' என்றும், ''செக் செய்கிறேன்'' என்றும் ஸ்வப்னா பதில் அளிக்கிறார்.
இந்த திட்டத்தின்படி, திரிச்சூரில் இருக்கும் வடக்கன்சேரி பகுதியில் 140 குடும்பங்களுக்கு வீடு கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான திட்ட செலவு ரூ.20 கோடி என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக யூனிடேக் பில்டர்கள் கட்டுமான ஒப்பந்தம் பெற்றனர். எனினும், இதன் எம்.டி. சந்தோஷ் ஈப்பன், சிலருக்கு ரூ.4.48 கோடி வரை லஞ்சம் கொடுக்கப்பட்டதாக குற்றம்சாட்டினார். இதைத் தொடர்ந்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இந்தநிலையில், வழக்கில் குற்றவாளியான சரித்குமார், சுவப்னா சுரேஷ் உள்ளிட்டோர் சிவசங்கர் மீது குற்றச்சாட்டினர். இதையடுத்து கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு சிவசங்கர் கைது செய்யப்பட்டு இருந்தார்.
செஞ்சிலுவைச் சங்கம் உருவாக்க சதி:
லைஃப் மிஷன் திட்டத்தின் ஒரு பகுதியாக செஞ்சிலுவைச் சங்கத்தை உருவாக்க சதி நடந்ததாக சந்தேகிக்கப்படுகிறது. சிவசங்கர் மற்றும் ஸ்வப்னாவின் போன்களில் இருந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் தடயவியல் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட தகவலும் கிடைத்துள்ளது. இவர்களுக்கு இடையே ஒரு நாள் மதியம் 1.32க்கு பிறகு நடந்த உரையாடலும் கிடைத்துள்ளது.
வேணுகோபால் வாக்குமூலம்:
நேற்று, சிவசங்கரின் கணக்காளர் வேணுகோபால் விசாரணை அதிகாரிகளிடம் வாக்குமூலம் அளித்தபோது, ஒவ்வொரு முறை ஸ்வப்னா தனது மற்றும் ஸ்வப்னா பெயரில் உள்ள லாக்கரை திறக்கும் போது, சிவசங்கருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சிவசங்கர் அனுமதியின் பேரில் தனது மற்றும் ஸ்வப்னா பெயரில் உள்ள லாக்கரை திறந்ததாக வேணுகோபால் தெரிவித்துள்ளார். முதற்கட்டமாக லாக்கரை திறந்து பார்த்தபோது அதில் ரூ.30 லட்சம் பணம் இருந்தது. இதுகுறித்து சிவசங்கரிடம் தெரிவித்துள்ளார். பின்னர் ஸ்வப்னா தனியாக லாக்கரை திறந்துள்ளார். அப்போது வேணுகோபால் அங்கு இல்லை. அந்த நிலையில் லாக்கர் திறக்கப்பட்டதை சிவசங்கரிடம் தெரிவித்ததாகவும், ஆனால் லாக்கரில் ஸ்வப்னா என்ன வைத்தார் என்பது தெரியவில்லை என்றும் அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் வேணுகோபால் வாக்குமூலம் அளித்துள்ளார்.