இலங்கைக்கு இந்தியா தனது முழு ஆதரவை அளிக்கும்… வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உறுதி!!
இலங்கைக்கு தேவையான ஆதரவை இந்தியா வழங்கும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு தேவையான ஆதரவை இந்தியா வழங்கும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. உணவு, எரிபொருள் என அனைத்தின் விலையும் உயர்ந்துள்ளது. மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதை அடுத்து அரசுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் எதிரொலியாக மகிந்த ராஜபக்சே, கோட்டபய ராஜபக்சே ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதை அடுத்து தற்போது இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்க உள்ளார். இவர் இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க அனைத்து கட்சி ஆட்சியை அமைக்கலாம் என்று அண்மையில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இலங்கைக்கு நம்மால் முடிந்த உதவிகளை உரிய முகமைகளை தொடர்புக்கொண்டு செய்வோம் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து பேசிய அவர், இலங்கையில் மிகக் கடுமையான நெருக்கடி நிலவுகிறது. இந்தியா தனது அண்டை நாடு முதல் கொள்கையின் ஒரு பகுதியாக மிகவும் மனிதாபிமான முறையில் அண்டை நாட்டின் நிலைமையை அணுகி வருகிறது. இலங்கையின் நிலைமை முன்னெப்போதும் இல்லாதது.
இந்தியா அதைப் பற்றி கவலைப்படுகிறது. இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அண்டை நாட்டில் ஏதேனும் வன்முறை நடந்தால், அது எங்களுக்கு ஆழ்ந்த கவலையளிக்கும். இந்தியா இலங்கைக்கு 3.8 பில்லியன் அமெரிக்க டாலர் வழங்கியுள்ளது. வேறு எந்த நாடும் இந்த அளவு ஆதரவை வழங்கவில்லை. ஏழு தசாப்தங்களில் இல்லாத மோசமான பொருளாதார நெருக்கடியை இலங்கை எதிர்கொண்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்துடனான இலங்கையின் கலந்துரையாடல்கள் முன்னோக்கி செல்லும் போது, சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கு இந்தியா தனது ஆதரவை வழங்கும். என்று தெரிவித்துள்ளார்.