மேற்குவங்க பஞ்சாயத்து தேர்தலின்போது ரத்தத்துடன் விளையாடினர்; மம்தா பானர்ஜியை விளாசிய பிரதமர் மோடி!!
மேற்குவங்க மாநிலத்தில் பஞ்சாயத்து தேர்தல் நடந்தபோது ரத்தத்துடன் விளையாடினார்கள் என்று மறைமுகமாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் கட்சியை பிரதமர் மோடி சாடினார்.
மேற்குவங்க மாநிலத்தின் ஷேத்திரிய பஞ்சாயத்து ராஜ் பரிஷத் நிகழச்சியில் பிரதமர் மோடி டெல்லியில் இருந்து காணொளி வாயிலாக பேசினார். அப்போது மேற்குவங்க மாநிலத்தின் ஆளும் கட்சியான திரிணமூல் காங்கிரஸ் கட்சியை கடுமையாக தாக்கிப் பேசினார்.
தொடர்ந்து மோடி பேசுகையில், ''மேற்குவங்க மாநிலத்தில் பஞ்சாயத்து தேர்தல் நடந்தபோது வாக்காளர்களை ஆளும்கட்சியினர் மிரட்டினர். அவர்களது வாழ்க்கையை நரகமாக்கினர். ஜனநாயகத்தின் சாம்பியன்கள் என்று தங்களைக் காட்டிக்கொள்பவர்கள்தான் மின்வாக்குப் பதிவு இயந்திரத்தை ஒழிக்க சதி செய்கிறார்கள். குறிப்பிட்ட அந்தக் கட்சி (திரிணமூல் காங்கிரஸ்) வாக்கு எண்ணிக்கையின்போது ரவுடிகளிடம் வாக்குப்பதிவு பூத்களை கைப்படுத்துமாறு கான்டிராக்ட் அளித்து விடுகின்றனர். அந்தக் கட்சியானது 'அபாயகரமான தாக்குதல்களை' நடத்தி வேலையை முடித்துக் கொள்கின்றனர்'' என்றார்.
ஏழை விளிம்புநிலை மக்கள் ஊழலின் தாக்கத்தை உணர்கிறார்கள்: ஜி20 கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
மேற்குவங்க மாநிலத்தில் ஜூலை 8-ம் தேதி நடைபெற்ற பஞ்சாயத்து தேர்தலில் பெரிய அளவில் வன்முறை நடந்து இருந்தது. இது தேசிய அளவில் பேசப்பட்டது. இந்த தேர்தலில் அதிக இடங்களில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று இருந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சட்டமன்றத் தேர்தலின் போது பெற்ற வெற்றியை அப்படியே தக்க வைத்துக் கொண்டு இருந்தது.
மாநிலத்தில் உள்ள அனைத்து 20 ஜில்லா பரிஷத்களையும் திரிணமூல் வென்று இருந்தது. மேலும் ஏறக்குறைய 80 சதவிகிதம் (மொத்தம் 3,317 இல் 2,641) கிராம பஞ்சாயத்துகள் மற்றும் 92 சதவிகிதம் (மொத்தம் 341 இல் 313) பஞ்சாயத்து சமிதிகளை வென்று இருந்தது. மேற்கு வங்கத்தில் பஞ்சாயத்து தேர்தலின்போதும், பின்னரும் மொத்தம் 40 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வாக்குப்பதிவு நாளில் மட்டும் 21 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.