ஆளுநருக்கும் மேற்கு வங்க அரசுக்கும் இடையில் நிலவும் பனிப்போரில் புதிய உச்சமாக ஆளுநர் ஜக்தீப் தன்கர், பிப்ரவரி 12ஆம் தேதி முதல் மேற்கு வங்க சட்டப்பேரவையை ஒத்திவைத்து அதிரடியாக அறிவித்துள்ளார்.
அரசியலமைப்புச் சட்டத்தின் 174 வது பிரிவின் உட்பிரிவு (a)இன் உட்பிரிவு (2) மூலம் ஆளுநராக எனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி, மேற்கு வங்க மாநிலத்தின் சட்டமன்றத்தை 12 ஆம் தேதி முதல் ஒத்திவைப்பதாக ஆளுநரின் மாளிகை வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.மேற்கு வங்க சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்னதாக இந்த நடவடிக்கையை ஆளுநர் எடுத்துள்ளார். வரும் சட்டசபை கூட்டத்தொடரில் ஆளுநருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வருவது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது ஆளுநரின் இச்செயல் பெரும் அனலை ஏற்படுத்தியுள்ளது.
சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் விரைவில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது, அடுத்த சட்டசபை கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன், மாநில அரசு ஆளுநரிடம் அனுமதி பெற வேண்டும், மேலும் அது அவரது உரையுடன் தொடங்க வேண்டும் எனும் நிலை ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் நாடாளுமன்றத்தில் எம்பி சுகேந்து சேகர் ரே, 170 விதியின் கீழ் ஒரு முக்கிய தீர்மானத்தை சமர்பித்தார்.அதில் மேற்கு வங்க ஆளுநராக இருந்து ஜக்தீப் தன்கரை நீக்குமாறு குடியரசு தலைவரை ராம்நாத் கோவிந்தை வலியுறுத்தினார்.மாநில அரசின் நடவடிக்கைகளில் ஆளுநர் தலையிடுவதாக திரிணாமுல் காங்கிரஸ் தொடர்ந்து புகார் அளித்து வருகிறது. மறுபுறம், ஆளுநர் தன்கர் மாநில அரசின் நடவடிக்கைகளை தொடர்ந்து விமர்சித்து வருகிறார். சமீபத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி ஆளுநர் தன்கரை ட்விட்டரில் முடக்கினார்.
இந்த செயல அரசியல் தளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது ஆளுநரால் மேற்கு வங்க மாநில சட்டமன்றம் முடக்கப்பட்டுள்ளது சர்ச்சையை கிளம்பியுள்ளது. சமீபகாலமாக, மசோதாக்களை நிறைவேற்றுவது தொடர்பாக, ஆளுநருக்கும் மேற்கு வங்க சட்டசபை சபாநாயகருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆளுநரின் இந்த செயல் "அரசியல் உள்நோக்கம்" கொண்ட செயல் என்று திரிணாமுல் காங்கிரஸ் விமர்சித்துள்ளது. மேலும் சட்டசபை கூட்டத்தொடர் இடைநிறுத்தப்பட்டால், மாநில அரசு தனது பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியாது, அது அரசின் செயல்பாட்டை பாதிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அரசின் பரிந்துரையின் பேரிலே சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது என்று ஆளுநர் மற்றொரு டிவிட் போட்டுள்ளார். அதில், “ஒரு பிரிவு ஊடகங்களில் தவறான செய்திகள் வெளியானதைக் கருத்தில் கொண்டு, சட்டசபையை ஒத்திவைக்கக் கோரிய அரசுப் பரிந்துரையைக் கவனத்தில் கொண்டே, சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பதிவிட்டுள்ளார்.
