காலம் எல்லாவற்றையும் மாற்றிவிடும் என்று சொல்வார்களே... இப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரையும் (சிபிஎம்) அது மாற்றி இருக்கிறது. மேற்கு வங்காளத்தில் திரிணாமூல் காங்கிரஸை எதிர்க்க காங்கிரஸ் கட்சியுடன் கைகோர்க்க சிபிஎம் தயாராகிவிட்டது.

பாஜகவை வீழ்த்த காங்கிரஸ் தலைமையில் மெகா கூட்டணி அமைக்கும் முயற்சிகள்  தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால், காங்கிரஸ் தலைமையிலான மெகா கூட்டணியில் சிபிஎம் இடம் பெறாது என்று அக்கட்சி அறிவித்துவிட்டது. இந்நிலையில் மேற்கு வங்காளத்தில் காங்கிரஸ் கட்சியுடன் தொகுதி உடன்பாடு செய்துகொள்ள சிபிஎம் அரசியல் தலைமைக்குழு முடிவு செய்திருப்பதாக் அக்கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி அறிவித்துள்ளார்.  

“மாநில அளவில் நிலைமைக்குத் தகுந்தார்போல் அந்தந்த மாநிலங்களில் பாஜக எதிர்ப்பு வாக்குகள் சிதறாத அளவில் தொகுதி உடன்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ள சிபிஎம் முடிவு செய்திருப்பதாக” யெச்சூரி தெரிவித்திருக்கிறார். அந்த அடிப்படையில் மேற்கு வங்கத்தில் பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரஸுக்கு எதிரான வாக்குகளைச் சிதறாமல் பாதுகாக்க வாய்ப்புள்ள தொகுதிகளில் இரு கட்சிகளும் உடன்பாடு செய்துகொள்வது என சிபிஎம் தெரிவித்துள்ளது. இந்தக் கருத்தை காங்கிரஸ் கட்சியும் ஆமோதித்துள்ளது. 

நாடாளுமன்ற மக்களவையில் தற்போது சிபிஎம்மிற்கு 9 உறுப்பினர்களே இருக்கிறார்கள். அந்த எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் சிபிஎம் உள்ளது. மேலும் தேசிய கட்சி என்ற அந்தஸ்தை தொடர்ந்து காப்பாற்ற வேண்டிய பெரும் பொறுப்பிலும் அக்கட்சி உள்ளது. எனவே, தேசிய அளவில் அல்லாமல் மாநில அளவிலான தொகுதி உடன்பாடுக்கு சிபிஎம் தயாராக உள்ளது என்று அக்கட்சி முடிவு செய்துள்ளது. 

மேற்கு வங்காளத்தில் காங்கிரஸுன் கூட்டணி அமைக்க சிபிஎம் ஈடுபாடு காட்டிவரும் நிலையில், கேரளாவில் இரு கட்சிகளும் ஒன்றையொன்று எதிர்த்து போட்டியிடும் சூழல் உள்ளது. இந்த முரண்பாட்டைக் காரணம் காட்டி பாஜக போன்ற கட்சிகள் பிரசாரம் செய்யும் என்ற கவலையும் சிபிஎம் கட்சியில் சில தலைவர்கள் மத்தியில் எழுந்துள்ளது. 

காங்கிரஸ் உடனான கூட்டணி  கேரளாவில் சிபிஎம்மிற்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று கேரள மாநிலக் குழு கருத்து தெரிவித்திருக்கிறது. ஒரு காலத்தில் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து தேசிய அளவில் அணி திரட்டிய சிபிஎம், இன்று பாஜக, திரிணாமூல் காங்கிரஸ் கட்சிகளை எதிர்ப்பதற்காக காங்கிரஸ் கட்சியுடன் கைகோர்க்கும் நிலைக்கு வந்திருக்கிறது.