ராகுல் காந்திக்கு விரைவில் திருமணம்

தொண்டர் ஒருவரின் கேள்விக்கு அளித்த பதிலில் தனக்கு விரைவில் திருமணம் நடைபெற இருக்கும் தகவலை ராகுல் காந்தி வெளியிட்டார்

.காங்கிரஸ் துணைத் தலைவரான ராகுல் காந்திக்கு 46 வயது ஆகிறது. அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

‘சித்தி எப்போது?’

உத்தரப்பிரதேச மாநிலம் பைரைச்சில் நேற்று முன்தினம் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ராகுல் காந்தி கலந்து கொண்டார். இதில் பேசிவிட்டு மேடையில் இருந்து கீழே இறங்கியவரிடம் ஒரு சுவையான கேள்வி எழுந்தது.

அவரை சுற்றி வளைத்த பொதுமக்களில் உ.பி இளைஞர் ஒருவர், 'ராகுல் சித்தப்பா, சித்தியை எப்போது கொண்டு வருவீர்?' எனக் கேட்டார்.

காத்திருக்க தேவை இல்லை

இதை கேட்டு புன்முறுவல் பூத்த ராகுல் முகத்தை சுற்றி இருந்தவர்கள் ஆவலுடன் எதிர்நோக்கினர். எனவே, வேறுவழியின்றி ராகுல், 'இதற்காக இனி அதிக நாட்கள் காத்திருக்கத் தேவையில்லை' எனப் பதில் அளித்தார்.

இதன் மூலம் தனக்கு விரைவில் திருமணம் நடைபெற இருக்கும் தகவலை ராகுல் வெளியிட்டு இருக்கிறார்.

 இதை கேட்டு அங்கிருந்த தொண்டர்கள் மகிழ்ச்சி ஆரவாத்துடன் ‘‘ராகுல்ஜி ஜிந்தாபாத்’’ எனக் வாழ்த்து கோஷமிட்டனர்.

முதன் முறை அல்ல

இதுபோல், ராகுலிடம் அவரது திருமணம் குறித்து கேள்விகள் எழுவது முதன்முறை அல்ல. கடந்த 2014 மக்களவை தேர்தலில் அவர் முதன்முறையாக அரசியல் களம் இறங்கினார்.

இதற்காக அவர் போட்டியிட்ட அமேதி தொகுதி பிரச்சாரத்தின் போது, உள்ளூர் காங்கிரஸ் தலைவர் இந்த கேள்வியை எழுப்பியிருந்தார்.

வெளிநாட்டுப் பெண்ணுடன்..

பிறகு, செய்தியாளர்களிடம் ராகுல் சாவகாசமாகப் பேசிய போதும் இந்த கேள்வி எழுந்ததாகவும், இதற்கு ராகுல், தான் ஒரு வெளிநாட்டு பெண்ணின் காதலில் இருப்பதாக கூறியதாகவும் செய்திகள் வெளியாகின.

தொடர்ந்து ராகுல் கலந்து கொள்ளும் பல கூட்டங்களில் இந்த கேள்வி அவ்வப்போது எழுந்து வருகிறது. ஆனால், முதல் முறையாக ராகுல் அதற்கு பதில் அளித்துள்ளார்.

பிராமண குடும்பத்தில்..

கடந்த வருடம் ஜூலையிலும் ராகுல் உத்தரப் பிரதேசத்தின் அலகாபாத்தை சேர்ந்த ஒரு பிராமணக் குடும்பத்து பெண்ணை மணமுடிக்க இருப்பதாக செய்திகள் பரவின.

இது குறித்து பா.ஜ.க.வின் மூத்த தலைவர் சுப்பிரமணியசாமியும், 'உ.பி. தேர்தலுக்கு முன்பாக ராகுல் மணமுடிக்க இருப்பதாகத் தன் டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு காங்கிரஸ் கட்சி சார்பில், ராகுல் திருமணம் குறித்து வெளியானது ஆதாரமில்லாத புரளி என மறுப்பு தெரிவித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.