'பிரதமர் மோடியின் புகழை இறக்கியே வேண்டும்...' விவசாயிகள் போராட்டத்துக்கு இடையே வெளியான வீடியோ வைரல்!!
''பிரதமர் மோடியின் புகழ் உச்சியில் இருக்கிறது. ராமர் கோவில் கட்டியதன் காரணமாக அவரது புகழ் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அவரது புகழை நாம் இறக்கியே ஆக வேண்டும். தேர்தலுக்கான நேரம் மிகவும் குறைவாக இருக்கிறது'' என்று விவசாயிகள் தலைவர் ஜக்ஜித் சிங் தல்லேவால் கூறிய வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் மோடிக்கு எதிரான வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் விவசாயிகள் தலைவர் ஜக்ஜித் சிங் தல்லேவால் பேசி இருக்கிறார். ''பிரதமர் மோடியின் புகழ் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதை நாம் தேர்தலுக்கு முன்பாக இறக்கியே ஆக வேண்டும்'' என்று பேசி உள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
விவசாயிகள் சங்கங்களுக்கும் மத்திய அரசுக்கும் இடையிலான மூன்றாவது சுற்று பேச்சுவார்த்தை வியாழக்கிழமை (இன்று) நடைபெறவுள்ள நிலையில் இந்த வீடியோ வெளியாகியுள்ளது. அமைச்சர்கள் அர்ஜுன் முண்டா, பியூஷ் கோயல் மற்றும் நித்யானந்த் ராய் ஆகியோர் மத்திய அரசின் பிரதிநிதிகளாக விவசாயிகளுடன் இன்று பேச்சுவார்த்தையில் ஈடுபடலாம் என்று தெரிய வந்துள்ளது.
தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், அரியானாவில் அமைக்கப்பட்டு இருக்கும் தடுப்புகளை மீறி டெல்லிக்குள் நுழைய இருப்பதாக விவசாயிகள் அச்சுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில்தான் இந்த வீடியோவும் வெளியாகி இருக்கிறது.
விவசாய ஏற்றுமதி 3ஆவது ஆண்டாக சரிவு: விவசாயிகளின் வருமானம் பாதிப்பு!
டெல்லிக்கு போராட்டக்காரர்கள் செல்வதைத் தடுக்கும் முயற்சிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தபோதும், போராட்டத்தை அமைதியான முறையில் தீர்க்கும் முயற்சியில் மற்றொரு சுற்று பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. கடந்த இரண்டு நாட்களில், போலீஸ் படைகளுக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. கல் வீச்சு சம்பவங்களால் போலீசார், விவசாயிகள் என இருதரப்பிலும் காயம் அடைந்தனர்.
ஏறக்குறைய 200-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களின் கூட்டணியை பிரதிநிதித்துவப்படுத்தும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், டெல்லிக்கு அணிவகுத்துச் சென்று, குறைந்தபட்ச ஆதாய விலை, விவசாயக் கடன் தள்ளுபடிக்கான சட்டப்பூர்வ உத்தரவாதம் பெறுதல், விவசாயிகளுக்கு எதிராகப் போராடுபவர்கள் மீதான கிரிமினல் வழக்குகளை திரும்பப் பெறுதல் உள்ளிட்ட தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர்.
6 மாசத்துக்கு உணவு, எரிபொருள் இருக்கு... நீண்ட போராட்டத்துக்குத் தயாராக வந்த விவசாயிகள்!
கடந்த திங்களன்று முடிவடையாத இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, மத்திய அமைச்சர் அர்ஜுன் முண்டா, விவசாயிகளின் பிரச்சனையைத் தீர்க்க பேச்சுவார்த்தையில் ஈடுபட அரசாங்கம் தயாராக இருப்பதாக தெரிவித்து இருந்தார்.
"நாங்கள் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவசாயிகளுடன் பயனுள்ள விவாதம் நடத்தினோம். ஒவ்வொரு விஷயத்தையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது. சில விஷயங்களில் நாங்கள் உடன்பாடுகளை எட்டியிருந்தாலும், மற்றவர்கள் நிரந்தர தீர்வுக்காக ஒரு குழுவை அமைக்க வேண்டும்," என்று முண்டா மீண்டும் வலியுறுத்தி இருந்தார். விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் அரசு கவனம் செலுத்துகிறது என்று தெரிவித்து இருந்தார்.