உத்தரபிரதேச மாநிலம், முசாபர் நகரில் கஸ்தூரிபாய் உண்டு உறைவிட பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் கழிவறையில், மாதவிடாய் ரத்தம் இருந்ததற்காக, அங்கு பயிலும் 70 மாணவிகளின் உடைகளை களையச் சொல்லி பெண்ணுறுப்பை சோதனையிட்டனர் விடுதி வார்டனும், தாளாளருமான பெண் சுரேகா தோமர்.

அது மட்டுமல்லாது, மாணவிகளிடம் விடுதி காப்பாளர் தகாத முறையில் நடந்து கொண்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவிகளின் உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதில், மாணவிகள், தங்களது உடைகளை மனிதாபிமானமற்ற முறையில் விடுதி காப்பாளரும், தாளாளரும் அகற்றியதாக குற்றம் சாட்டியிருந்தனர்.

விடுதி காப்பாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மாணவிகளின் உறவினர்கள் புகாரில் வலியுறுத்தி இருந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், இது குறித்து விசாரணை நடத்த விசாரணைக் கமிட்டி அமைக்கப்பட்டது.

விசாரணைக் கமிட்டி நடத்திய விசாரணையில் மாணவிகளின் குற்றச்சாட்டு உண்மை என நிரூபனமாகியுள்ளது. இதையடுத்து விடுதி காப்பாளர் மற்றும் தாளாளர் ஆகியோர் பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.