சந்திரபாபு ஆட்சி காலத்தில் தன் மீதான முறைகேடு வழக்குகளில் ஒருதலைப்பட்சமாக செயல்பட்ட அதிகாரியின் வீட்டில் சோதனை நடத்தி பழி தீர்த்துக் கொண்டுள்ளார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி. 

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, முதல்வராக பொறுப்பேற்றது முதல் பல்வேறு அதிரடிகளை அரங்கேற்றி வருகிறார். சந்திரபாபு நாயுடு அவரது வீட்டருகில் ரூ.5 கோடி செலவில் பிரஜா வேதிகா கட்டடத்தை அதிரடியாக இடிக்க உத்தரவிட்டார். அந்தக் கட்டடம் தரைமட்டமாக்கப்பட்டது. இதனையடுத்து சந்திரபாபு இல்லத்தையும் முறைகேடாக கட்டப்பட்டதாகக் கூறி விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார்.

 

இந்நிலையில் சந்திரபாபு ஆட்சி காலத்தில் ஜெகன் மோகன் ரெட்டிக்கு எதிராக பணமோசடி வழக்குகளை விசாரித்த சீனிவாச காந்தி வீட்டில் சோதனை நடத்த உத்தரவிட்டார். சீனிவாச காந்தி, தற்போது ஐதராபாத்தில் இருக்கும் ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு தடுப்புப்பிரிவில் பணியாற்றி வருகிறார்.

கடந்த 2017ம் ஆண்டு அமலாக்கத்துறை உதவி இயக்குநராக இருந்த சீனிவாச காந்தி, சோதனை என்கிற பெயரில் தன்னை வேட்டையாடுவதாக ஜெகன் மோகன் ரெட்டி பிரதமர் மோடியிடம் முறையிட்டார். தெலுங்கு தேசம் கட்சியின் உதவியோடு தங்கள் குடும்பத்தினர் மீதும், தன் மீதும் அமலாக்கத்துறை ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாகவும், பழிவாங்கவே தங்கள் மீது வீண் நடவடிக்கை எடுப்பதாகவும் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்து இருந்தார்.

 

இதனையடுத்து சீனிவாச காந்திக்கு சொந்தமான இடங்களுக்கு சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்த உத்தரவிட்டார். அதனடிப்படையில் ஐதராபாத்திலும், விஜயவாடாவிலும் அதிகாரிகள் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத ரூ. 3 கோடியே 75 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சீனிவாச காந்தி, அவரது மனைவி, மகள் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.